ஐதராபாத், மார்ச் 1–
தெலுங்கானாவில் சுரங்க நிலச்சரிவில் சிக்கிய தொழிலாளர்கள் 8 பேரும் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் உள்ள நாகர்கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அங்குள்ள நல்கொண்டா மாவட்டத்தில் நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்தவும், மூளையைப் பாதிக்கக்கூடிய புளோரைட் கனிமத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கவும், கிருஷ்ணா நதிநீரைப் பயன்படுத்த இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காகப் பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 22–ந்தேதி சுரங்கத்தின் மேற்பகுதியில் விரிசல் ஏற்பட்டு திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த 40க்கும் மேற்பட்டோர் தப்பிய நிலையில், 2 பொறியாளர்கள், 2 ஆப்பரேட்டர்கள், 4 தொழிலாளர்கள் என மொத்தம் 8 பேர் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனர்.
அவர்கள் உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. சுரங்கத்துக்குள் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம், கடற்படை வீரர்கள் தீவிர முயற்சியை மேற்கொண்டு வந்தனர். சுரங்கத்துக்குள் சேறும் சகதியும் பெருமளவு இருந்ததால், மீட்புப் பணிகளுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்து வந்தது.
30 அடி உயரம் கொண்ட சுரங்கத்தில் 25 அடி வரை சகதி நிரம்பி கிடந்தையடுத்து, மீட்புப் படையினர் தண்ணீரை அகற்றி சுரங்கத்துக்குள் முன்னேறினர். நீடித்த கடும் முயற்சிக்கு பின், சுரங்கம் இடிந்து விழுந்த இடத்தை 20 பேர் அடங்கிய மீட்புக் குழுவினர் சென்றடைந்தனர். ஆனால் சகதி இறுகி கிடப்பதால், 8 பேரும் எங்கு சிக்கியுள்ளனர் என்பதை மிகச் சரியாக கண்டுபிடிக்க மோப்ப நாய் அழைத்து வரப்பட்டது. இறுகி கிடக்கும் சகதியை உடைக்கும் பணியும் நடந்தது.
இந்த நிலையில், சுரங்க நிலச்சரிவில் 5 பேர் சேறு, சகதியில் சிக்கி பலியானதும், 3 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியானதும் அதிநவீந சிரிய ரக டிரோன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒருவாரமாக மீட்புப் பணி நடைபெற்று வந்தும் பயன் அளிக்காமல் போனது.
இதுகுறித்து தொழிலாளர்களில் ஒருவரான குர்பிரீத்தின் கூறுகையில், என்ன நடக்கிறது என்பது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. சுரங்கப்பாதைக்குள் செல்வதற்கு நாங்கள் அனுமதி கேட்டோம், ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் சுரங்க நிலச்சரிவில் சிக்கிய 8 பேரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கிராமத்தில் உள்ள அனைவரும் மிகவும் கவலையில் உள்ளனர் என்று கூறியுள்ளார்.