செய்திகள்

தெற்கு ரெயில்வேயின் 25 வழித்தடங்களில் பாதுகாப்பு தொழில்நுட்பம் நிறுவ திட்டம்

Makkal Kural Official

சென்னை, ஏப்.29–

தெற்கு ரெயில்வேயின் 25 வழித்தடங்களில் ‘கவாச்’ பாதுகாப்பு தொழில்நுட்பத்தை நிறுவ தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

‘விபத்து இல்லாத ரெயில் பயணம்’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 2021–-ம் ஆண்டில் மத்திய பட்ஜெட்டில் ஆத்ம நிர்பர்பாரத் திட்டத்தின் கீழ், ‘கவாச்’ எனப்படும் பாதுகாப்பு முறை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ‘கவாச்’ தொழில்நுட்பம் என்பது தானியங்கி ரெயில் மோதல் தவிர்ப்பு பாதுகாப்பு அமைப்பாகும்.

ஆர்.டி.எஸ்.ஓ. எனப்படும் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர அமைப்பு வாயிலாக 3 இந்திய நிறுவனங்களுடன் இணைந்து ‘கவாச்’ தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. இதன் முக்கிய அம்சங்களாக, ஆபத்து நேரங்களில் சிக்னல்களைத் தாண்டும்போது, ரெயில் ஓட்டுநர்களுக்கு உதவும் வகையிலும், ரெயில் ஓட்டுநர்கள் செயல்பட தவறும்பட்சத்தில் தானாகவே பிரேக் போடும் வகையிலும், அடர்ந்த மூடுபனி போன்ற பாதகமான வானிலையின்போது உதவும் வகையிலும் தொழில் நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரெயில்களின் வேகம் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இந்த அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்ப வசதி, விரைவு ரெயில்கள் அதிகமாக இயக்கப்படும் வழித்தடங்களில் கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, நாட்டின் முக்கிய வழித்தடங்களில் ‘கவாச்’ தொழில்நுட்பத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தெற்கு ரெயில்வேயில் 25 வழித்தடங்களில் மொத்தம் 2,216 கி.மீ. தொலைவுக்கு (இருமார்க்கமாக பாதையில்) ‘கவாச்’ தொழில்நுட்பத்தை நிறுவ ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:–

தெற்கு ரெயில்வேயில் 271 கி.மீ. தொலைவிலான உயர் அடர்த்தி வழித்தடங்கள், 1,945 கி.மீ. தொலைவிலான உயர் பயன்பாடு வழித்தடங்கள் ஆகியவற்றில் ‘கவாச்’ தொழில்நுட்பத்தை நிறுவ திட்ட மிடப்பட்டுள்ளது.

சென்னை –- அரக்கோணம் (68 கி.மீ.), அரக்கோணம் –- ரேணிகுண்டா (65 கி.மீ.), சென்னை –- கூடூர் (138 கி.மீ.) வழித்தடம் ஆகியவை உயர் அடர்த்தி வழித்தடம் ஆகும். இங்கு முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அரக்கோணம் -– ஜோலார்பேட்டை (150 கி.மீ), சென்னை சென்ட்ரல் –- கடற்கரை (6.62 கி.மீ.), சென்னை எழும்பூர் –- தாம்பரம் -– செங்கல்பட்டு (60 கி.மீ.), செங்கல்பட்டு -– விழுப்புரம் (102.76 கி.மீ.), ஜோலார்பேட்டை –- சேலம் – – ஈரோடு (179.29 கி.மீ.), ஈரோடு –- இருகூர் –- கோவை –- போத்தனூர் (106.54 கி.மீ.), இருகூர் –- போத்தனூர் (10.77 கி.மீ.), ஈரோடு –- கரூர் (65.38 கி.மீ.), சேலம் –- நாமக்கல் –- கரூர் (85.19 கி.மீ.), விழுப்புரம் -– திருச்சி (178 கி.மீ.), திண்டுக்கல் –- மதுரை ( 65.78 கி.மீ.), மதுரை –- விருதுநகர் (43.18 கி.மீ.), விருதுநகர் –- வாஞ்சிமணியாச்சி (84.48 கி.மீ.), திருநெல்வேலி –- நாகர்கோவில் (73.29 கி.மீ.) உட்பட 22 உயர் பயன்பாடு வழித்தடங்களில் ‘கவாச்’ தொழில்நுட்பத்தை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *