செய்திகள் முழு தகவல்

தெற்குலக நாடுகளுக்கு நல் முன் உதாரணமாய் நாம்!

Makkal Kural Official

தலையங்கம்


சமீபத்திய உரையில் காமன்வெல்த் செயலாளர் ஜெனரல் பட்ரிசியா ஸ்காட்லாந்து, இந்தியாவை பாராட்டியதுடன் மேற்கு நாடுகளின் மாசுபடுத்தும் செயல்களை கண்டித்துள்ளார். காமன்வெல்தின் 56 நாடுகள் கொண்ட குழுவில் உள்ள 2.7 பில்லியன் மக்களுடன், இந்தியா தன்னுடைய திறன்களையும் தொழில்நுட்பத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

சமீபத்தில் இந்தியா காலநிலை விளைவுகளை சந்தித்து வருவது அறிந்ததே. கோடையின் கடுமையான வெப்ப அலைகள் மற்றும் தற்போதைய பருவ மழையால் கேரளா மற்றும் அதன் எல்லைப் பகுதியான தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகள் அவசர நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

பல ஏழை மற்றும் நடுத்தர வருமான நாடுகள், தற்போதைய உலகின் வெப்பமாதல் மாற்றங்களின் கடுமையை எதிர்நோக்க காரணம் பொருளாதார வல்லரசுகள் தான், ஆகவே எங்களை விலை குறைந்த கரும் புகை தடுப்பு முறைகளுக்கு முதலீடுகள் செய்ய வைப்பது தவறு, மேலும் எங்களுக்கும் சாத்தியமே இல்லாதது என்று கூறி வருகிறார்கள். கரும்பு வெளியேற்றும் எரிபொருள்களைப் பயன்படுத்த அவர்களுக்கு விரைவில் தடை வரலாம் ஆனால் அதை ஏற்று செயல்பட வலிமை அவர்களுக்கு கிடையாது. ஆனால் நமது சமீபத்து முயற்சிகள் பல முன்னணி நாடுகளின் பாராட்டை பெற காரணம் என்ன?

இந்தியாவின் சுற்றுச்சூழல் பொருளாதாரம் மற்றும் புதிய வளர்ச்சி திட்டங்கள் நல்ல முன் உதாரணங்கள், செயலாளர் ஜெனரல் ஸ்காட்லாந்து பாராட்டியுள்ளார். பிரதமர் மோடியின் புதிய நகரங்களை உருவாக்கும் முயற்சிகளைப் பாராட்டி, இந்த மாறுதல் அணுகுமுறையை உலகமே பின்பற்ற வேண்டிய நல்ல முன்உதாரணங்கள் என கூறியுள்ளார்.

இந்தியாவின் தேசிய காலநிலை திட்டம், பூமியின் வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்குள் கட்டுப்படுத்தவும் 2030ஆம் ஆண்டுக்குள் மாசுபடுத்தாத சக்தி உற்பத்தி திறனை 50 சதவிகிதம் அதிகரிக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது, இந்தியா 446 கிகாவாட்கள் மொத்த மின் உற்பத்தி திறனைக் கொண்டுள்ளது, அதில் 195 கிகாவாட்கள் புதுப்பிக்கத்தக்க சக்தியிலிருந்து பெறப்படுகிறது. இந்த சாதனையின் பின்னனியில் ரஷ்யா நமக்கு தந்து உதவிய அணு மின் உற்பத்தி முறைமைகள் பேர்உதவியாக இருப்பதை அறிவோம்.

புதுப்பிக்கும் எரிசக்தி திட்டங்களை விரிவுபடுத்துதல், சமத்துவமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வளர்ச்சிக்கான ஒரு சக்திவாய்ந்த முன்னுதாரணத்தை அமைக்க முடியும், அதை அமைத்தும் வருகிறோம்.

நமது நிலையான பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் காண்பது, தேசிய அவசியம் மட்டுமல்ல, உலகளாவிய தேவையும் இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்ட வளர்ச்சி மாதிரியை உருவாக்குவதன் மூலம், இந்தியா தெற்குலக நாடுகளுக்கு வழிப்புணர்வுடன் வளர்ச்சிகளுக்கு உதவ முடியும்.

தொழில்புரட்சி யுகத்தில் இந்தியாவின் பங்களிப்பு மிகக் குறைவாக இருந்து இருக்கலாம், ஆனால் இன்றைய காலகட்டத்தில் உரிய பொறுப்புடன் செயல்படும் வல்லரசாக உயர்ந்துள்ளோம்.

நம்முடைய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள், மின் வாகன உபயோகத்தில் எழுச்சி, உயர்தர கழிவு மேலாண்மை தீர்வுகள் மற்றும் பிரமாதமான விவசாய நடைமுறைகள் இந்தியா ஒரு பசுமையான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கிறது, உலகிற்கும் வழிகாட்டுகிறது.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *