சென்னை, செப். 14–
தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 21 தங்கப் பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
4-வது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கில் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. இதன் நிறைவு நாளான நேற்று பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா மொத்தம் 21 தங்கம்,22 வெள்ளி, 5 வெண்கலம் என 48 பதக்கங்களைக் கைப்பற்றி முதலிடத்தைப் பிடித்தது.இலங்கை 9 தங்கம், 9 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களை வென்று 2-வது இடத்தைக் கைப்பற்றியது.
முன்னதாக ஆடவருக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் பிரியன்ஷு பந்தய தூரத்தை 3:53.2 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான ராகுல் சர்னாலியா வெள்ளிப் பதக்கம் வென்றார். மகளிருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் தீபிகா 54.98 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான பூனம் (51.21) வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றினார். மகளிருக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் தமன்னா (14.43) தங்கப் பதக்கமும், பூஜா குமாரி (14.02) வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
மகளிர் 4 X 400 தொடர் ஓட்டத்தில் சச்சின் சாங்லி, சந்திரா மோள் சாபு, கனிஸ்டா டீனா, நீரு பாதக் ஆகியோர் அடங்கிய அணி முதலிடம் பிடித்து தங்கம் வென்றது. இலங்கை அணி 2-வது இடத்தையும், வங்கதேச அணி 3-வது இடத்தையும் பிடித்தது. மகளிர் பிரிவு 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை வினீதா குர்ஜார் முதலிடமும், மற்றொரு இந்திய வீராங்கனை லக்சிதா வினோத் சாண்டிலியா 2-வது இடத்தையும், இலங்கையின் துலான்ஜி 3-வது இடத்தையும் பிடித்தனர்.