ஆர். முத்துக்குமார்
எம்.பி.க்களின் அமளியால் பாராளுமன்றம் தொடர்ந்து முடங்கிக்கொண்டிருப்பது கவலையைத் தருகிறது, தவறான முன் உதாரணமாகவும் மாறி வருகிறது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2–-வது அமர்வு கடந்த 13–-ம் தேதி தொடங்கியது. அதானி குழும முறைகேடுகள் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.
இந்தியாவில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என லண்டனில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் மன்னிப்பு கேட்கவேண்டும் என ஆளும் கட்சியினர் பதில் கோஷமிட்டனர். இதே கோஷம் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. இந்த காரணங்களால் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியினரும் பாராளுமன்றத்தில் எந்த நடவடிக்கையையும் நடக்காமல் முடக்கி விடுவதால் யாருக்கு என்ன லாபம்?
வாக்காளர்களின் ஆதரவுடன் பணியாற்ற கிளம்பியவர்கள் இப்படிப்பட்ட பல்வேறு காரணங்களுக்காக பாராளுமன்றத்தில் அமளி ஏற்படுத்தி செயல்படாது முடக்குவது இனியும் தொடர்வதால் நமக்கு எந்த லாபமும் கிடையாது. சட்ட திருத்தங்கள் முதல், மக்கள் நல திட்டங்கள் வரை காரசாரமாக விவாதிக்கப்பட்டால் பல புதிய கருத்துக்கள் வெளிவரும் அல்லவா? அதற்கு வழியின்றி இப்படி பாராளுமன்றத்தை முடக்கி விடுவது நமது ஜனநாயகத்தை சீர்குலைப்பது என்ற தீய சக்திகளுக்கு கிடைத்திருக்கும் சக்தியான ஒரு ஆயுதமாகவே மாறிவிட்டது.
ஜனநாயகத்தின் மேன்மையை உணர்ந்த சமுதாய சிற்பிகள், நாட்டின் வளர்ச்சி மீது நம்பிக்கை கொண்ட அறிவாளிகள் அரசியல் ரீதியான விவாதங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்து நாட்டின் வளர்ச்சியை தடுப்பதை நிறுத்த ஆலோசித்தாக வேண்டும்.
பல சட்ட மசோதாக்கள் நிறைவேறினாலும் இப்படி அமளிகளுக்கு இடையே எந்த விவாதமுமின்றி செயல்படுத்தப்படுகிறது, இதைத் தான் ஆளும் கட்சி ஆசைப்படுகிறதா?
எப்படியும் ஆளும் கட்சி தன் பலத்தால் மசோதாவை நிறைவேற்றிக் கொள்ளும். அதை நிறுத்திட கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி மக்கள் கவனத்தை திசை திருப்பலாமே என எதிர்கட்சிகள் நினைத்து இப்படி குளறுபடி அரசியலை நடைமுறைப்படுத்துகிறார்களா?
அவையை சுமுகமாக நடத்த அனுமதிக்க வேண்டும் என எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார். ‘‘அமளியில் ஈடுபடுவதற்காக, மக்கள் உங்களை இங்கு அனுப்பவில்லை. அனைவரும் பேச வாய்ப்பு அளிக்கிறேன். அவையை சுமுகமாக நடத்த உதவுங்கள்’’ என்றார். அவரது வேண்டுகோளை எம்.பி.க்கள் கண்டுகொள்ளாததால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாகவும், மக்களவை மீண்டும் நாளை மறுநாள் கூடும் எனவும் அறிவித்தார். அப்போது அவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இதர அமைச்சர்கள் இருந்தனர்.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் கோடி கடந்த மாதம் 9-–ம் தேதி மாநிலங்களவையில் பேசினார். அப்போது ‘‘நாட்டில் 600-க்கும் மேற்பட்ட அரசு திட்டங்களுக்கு நேரு – காந்தி குடும்பத்தினரின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் நேரு குடும்பத்தினர் யாரும் தங்களது பெயர்களில் நேருவை ஏன் சேர்க்கவில்லை என்பதுதான் புரியவில்லை. இதிலென்ன வெட்கம் அவர்களுக்கு?’’ என்றார்.
இதனால் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி.யுமான வேணுகோபால், அவைத் தலைவரிடம் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளார். ‘காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக, பிரதமர் மோடி தரக்குறைவான கருத்துகளை தெரிவித்துள்ளார். இந்த கருத்து மக்களவை உறுப்பினர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தியை கேலி செய்வது போன்றும், புண்படுத்துவது போன்றும், அவமதிக்கும் வகையிலும் உள்ளது. அதனால், மாநிலங்களவை விதி எண் 188-ன் கீழ் பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்கிறேன். அவர் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அமளி அரசியலில் பிரதமர் மோடியும் களம் இறங்கியுள்ளார்!
இப்படியாக பிரதமர் மோடியும் பாராளுமன்றத்தில் தெரு முனை அரசியல் விவாத பேச்சை பாராளுமன்றத்தில் பேசி அமளி துமளி அரசியலுக்கு எரியும் தீயில் எண்ணையை ஊற்றி எரியும் தீயை பரவ உதவியிருக்கிறார்.