ஐதராபாத், ஜூலை 17–
ஐதராபாத்தில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ஜவஹர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரத். இவரின் மகனான ஒன்றரை வயது சிறுவன் விகான், இரவு தன் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த தெரு நாய்கள் விகான் மீது பாய்ந்து அவனுடைய தலைமுடியை கவ்வி இழுத்துச் சென்று சிறுவனை கடித்து குதறியது. இதில் அந்த சிறுவன் படுகாயம் அடைந்தான்.
சிறுவன் பலி
அந்த சிறுவனின் முகம் மற்றும் உடல் பாகங்கள் அனைத்தையும் தெருநாய்கள் கடித்து குதறிய நிலையில் அவருடைய தலைமுடி அந்தப் பகுதியில் சிதறி கிடந்தது. இதனை கவனித்த அந்த பகுதி மக்கள் உடனடியாக சிறுவனின் பெற்றோருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சிறுவனின் பெற்றோர், சிறுவன் விகானை உடனடியாக ஐதராபாத்தில் உள்ள காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவத்தால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது. சில நாட்களுக்கு முன் ஐதராபாத் அம்பர் பேட் பகுதியில் 2 வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.