சிறுகதை

தெரியாமை – ராஜா செல்லமுத்து

விரிந்து பரந்து கிடந்த நிலப்பரப்பில் ஒருபக்கம் அருங்காட்சியகம். மறுபக்கம் கன்னிமாரா நூலகம் என்று அறிவைச் சுமந்து நின்றது அந்த செவ்வண்ண கட்டிடம்.

அருங்காட்சியகத்திற்கு வருபவர்களும் நூலகத்திற்கு வருபவர்களும் என்று அந்த இடம் மிகவும் பரபரப்பாக இருந்தது.

சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் நூலகத்தை ஆச்சரியமாக பார்த்து செல்வார்கள். நான்கு மாடிகள் கொண்ட அந்தக் கட்டிடத்தை வியந்து பார்த்த ஒருவர் சொன்னார்.

‘‘இங்க இருக்கிற எல்லா புத்தகங்களையும் அறிஞர் அண்ணா படிச்சு இருக்காருன்னு நான் கேள்விப்பட்டு இருக்கேன்’’ என்று அவர் சொல்ல, ‘‘இவ்வளவு புத்தகத்தையும் அவர் படித்துனாலதான் பேரறிஞர் அண்ணான்னு அவருக்குப் பட்டம் கொடுத்து இருக்காங்க. தமிழ்நாட்டு முதலமைச்சராகி மக்களுக்கு நன்மைகள் செய்திருக்கிறார். படிப்புதான் ஒரு மனிதன அறிவாளி ஆக்கும்’’ என்று நூலகத்திற்கு நுழைந்த இரண்டு நபர்கள் பேசிக்கொண்டு சென்றார்கள்.

நாளிதழ்கள் ஒரு மாடியில். போட்டித் தேர்வுக்கு படித்துக் கீழ்தளத்தில் தினசரி பத்திரிக்கைகள் ஒரு மாடியில் கதை, கவிதை புத்தகங்கள் இன்னொரு மாடியில் என்று புத்தகங்களால் நிரம்பி வழிந்தது கன்னிமாரா நூலகம்.

அவ்வளவு பெரிய நூலகத்திற்கு சிறப்பானதொரு கழிவறை இல்லாததால் முகம் சுளித்தபடி ஒருவர் திட்டிவிட்டுப் போனார்.

எவ்வளவு ஆளுக வந்து போறாங்க நல்ல கழிப்பறை கூட இல்லையே இது தவறு. படிக்கிற இடம் எவ்வளவு சுத்தமாக இருக்கனும். இது தொற்றுநோய் காலம்; இன்னும் ரெண்டு கழிவறை கட்ட வேண்டியதுதானே என்று வருத்தப்பட்டு சொல்லிப் போனார் ஒருவர்.

போட்டித் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் கல்லூரிக்குச் செல்வதைப் போலவே நூலகத்திற்கு வந்து படித்துக் கொண்டிருந்தார்கள்.

காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை திறந்திருக்கும் அந்த அறிவு பெருஞ்சாலை.

முழுவதும் குளிரூட்டப்பட்ட அந்தக் கன்னிமாரா நூலகத்தில் காலை 8 மணிக்கு உள்ளே சென்றால் இரவு 8 மணி வரை நீங்கள் அறிவை நிரப்பி வரலாம்.

யாருடைய அனுமதியும் யாருடைய சிபாரிசும் அங்கு செல்வதற்கு தேவையில்லை. விருப்பமும் எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும் இருந்தால் நீங்கள் அந்த கட்டிடத்திற்குள் நுழைந்து விடலாம்.

போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் அது சம்பந்தப்பட்டநூல்கள் குறிப்புகள் என்று நிறைந்திருந்தது கீழ் தளம்.

குளிர்சாதன வசதி செய்யப்பட்ட கீழ்தளத்தில் ஆங்காங்கே மின்விசிறிகள் வைத்திருந்தார்கள்.

அந்த மின்விசிறியை சுழல விட்டால் அந்தப் பகுதியில் இருக்கும் ஆட்கள் எல்லோருக்கும் காற்று கிடைக்கும்.

ஆனால் ஒரு பெண் அந்த மின்விசிறியை சுழல விடாமல் தனக்கு மட்டுமே காற்று அடிக்கும் படி வைத்து இரண்டு காதுகளிலும் ஹெட் போனை வைத்து லேப்டாப்பில் எதையோ பார்த்துக் கொண்டு ஒழுங்கற்ற முறையில் அமர்ந்துகொண்டு எதையோ படித்துக் கொண்டிருந்தாள்.

அந்தப் பெண் அவள் அருகில் பின்பக்கம், முன் பக்கம் என்று ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். முன்பக்கம் மரப்பலகையால் ஆன ஒரு கப்போர்டு இருந்தது. அவள் அமர்ந்திருப்பது அவர்களுக்கு தெரியாது. அவள் இடது புறமும் வலது புறமும் அமர்ந்திருப்பவர்களுக்கு அவர்களின் அட்டகாசம் தெரியும். அந்த முழு காற்றாடியின் காற்று மொத்தத்தையும் அவள் வாங்கிக் கொண்டு, தன் காலை மேலே தூக்கி வைத்துக் கொண்டு ஒருவாறாக ஒழுங்கீனமாக படித்துக் கொண்டிருந்தாள்.

அந்த வழியாக வெளியே செல்வோர், உள்ளே வருவார் என்று அத்தனை பேர்களும் அவளை ஒரு மாதிரியாக பார்த்துச் சென்றார்கள்.

ஆனால் அவள் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தான் போன போக்கில் அமர்ந்து தன் இஷ்டப்படி அந்தக் காற்றாடியைச் சுழல விட்டுப் படித்துக் கொண்டிருந்தாள்.

இது பார்ப்பவர்களுக்கு ஒரு விதமான எரிச்சலத் தந்தது.

‘‘இது என்ன? இந்த பொண்ணு அவங்க வீட்டில உட்கார்ந்து இருக்கிற மாதிரி உட்கார்ந்து இருக்கு. அதுவும் அந்த பொண்ணுக்கு மட்டுமே வருறது மாதிரி காற்றாடியை வச்சிருக்கு. இது தவறு. இது அரசாங்க சொத்து. எல்லோருக்கும் பொது. அந்த பொண்ணுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமை இந்த நூலகத்துக்கு வர்றவங்களுக்கு இருக்கு’’ என்று ஒருவர் பேசிக் கொண்டிருந்தார்.

அந்தப் பெண் காதில் ஹெட்போன் போட்டிருந்ததால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் படித்துக் கொண்டிருந்தாள்.

அவள் வெளியில் எழுந்து போனால் கூட அந்த காற்றாடியை அணைத்து வைப்பதில்லை. அவள் இல்லாத இடத்திற்கும் காற்று நிரப்பிக் கொண்டிருந்தது. அந்த காத்தாடி, அவள் போனதும் அவள் வலப்பக்கம் அமர்ந்திருந்த ஒருவர் அந்த காற்றாடியின் முகத்தை திருப்பி தன் பக்கம் வைத்தார்.

வெளியே சென்ற அந்தப் பெண் திரும்பிவந்து மறுபடியும் தன் பக்கமே மொத்த காற்றையும் படுமாறு அந்த காற்றாடியை திருப்பி வைத்தாள்.

அவருக்கு கோபம் வந்தது.

‘‘என்ன இது? உங்க வீட்டு காத்தாடியா? மொத்தத்தையும் நீங்களே வச்சிருக்கீங்க. இது அரசாங்க சொத்து. எல்லாருக்கும் உரிமை. உங்களுக்கு மட்டும் வேணும்னா, நீங்க உங்க வீட்டுல தான் இப்படி போட்டு ஒக்காரனும்’’ என்று அவர் திட்ட, சுற்றி இருப்பவர்களும் அந்த நபர் பேசியதற்கு ஆதரவாகவே பேசினார்கள் .

அந்தப் பெண் எதையும் பேசவில்லை அமைதியாக இருந்தாள். ஏற்கனவே திருப்பிய அந்த நபர் மீண்டும் தன் பக்கம் காற்றாடியை திருப்பி வைத்தார்.

அந்தப் பெண் எதுவும் பேசாமல் படிக்க தொடங்கினாள். இப்போது அவளுக்கு காற்று கொஞ்சம் தடைபட்டது. சிறிது நேரத்திற்கெல்லாம் அவள் உடல் தெப்பமாக வியர்த்துக் கொட்டி நனைந்திருந்தது.

தன் கைக்குட்டையை எடுத்து துடைத்துத் துடைத்து கைக்குட்டை ஈரமானது. அவள் அணிந்திருந்த சுடிதார் முழுவதும் தெப்பமாக நனைந்தது.

அப்போது அருகில் இருக்கும் அருகில் இருப்பவர் பார்த்தார்.

இந்தப் பொண்ணுக்கு இப்படி வேர்க்குது. ஏசி தான் போட்டு இருக்கே? என்று அவர் சொல்ல அந்தப் பெண் கண்கள் இரண்டிலும் நீர் நிறைந்து வழிந்தது.

‘‘ஏன்? ஏன்? அழுகிற?’’ என்று இன்னொருவர் கேட்டபோது, ‘‘சார் எனக்கு காத்து இருந்துகிட்டே இருக்கணும். வீட்டிலேயும் வெளியே போனாலும் என் மேல காத்து பட்டு கிட்டே இருந்தா மட்டும் தான் என் உடம்பு வேர்க்காம இருக்கும். நான் வேணும்னே இந்த காத்தாடிய என் பக்கம் திருப்பி வைக்கல. என்னுடைய உடல் நிலையைப் பார்த்து தான் வச்சேன். நீங்க உங்ககிட்ட நான் சொல்ல முடியல. ஏன்னா இது பொது சொத்து அப்படிங்கறது எனக்கும் தெரியும். ஆனா என்னுடைய நிலைமையை உங்ககிட்ட சொன்னா நல்லா இருக்காதுன்னு தான் வச்சேன். இது என்னோட தப்பு தான் சார். என்னை மன்னிச்சிடுங்க’’ என்றாள் அந்தப் பெண்.

‘‘ஐயோ சாரிங்க. நான் தவறான நினைச்சிட்டேன். உங்களுக்கே அந்தக் காத்தாடி போகட்டும்; மன்னிச்சிடுங்க’’ என்று ஏற்கனவே அந்த காற்றாடியைத் திருப்பி வைத்த அந்த நபர் அவளின் உடல் மீது படுமாறு காற்றாடியைத் திருப்பி வைத்தார்.

‘‘இல்ல சார் வேண்டாம். நீங்களே வச்சுக்குங்க’’ என்று அவள் காற்றாடியைத் திருப்பினாள்.

‘‘இல்லப்பா, பரவாயில்லை; எங்களுக்கு இந்த ஏசி காத்து போதுமானது. உன்னுடைய உடம்பு காத்து போடலனா வேர்க்கும். அப்புறம் ஏதாவது ஒரு பிரச்சினை ஆயிடும். உனக்கே போகட்டும்’’ என்று சொல்லி, அந்தக் காற்றாடியை முழுவதையும் அவள் பக்கமே திருப்பி வைத்தார்.

அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

தீர விசாரிக்காமல் எதையும் செய்யக் கூடாது. ஒருவர் ஒரு தவறு செய்கிறார் என்றால் ஏதோ ஒரு காரணம் இருக்கும். நாம் அந்த காரணத்தைத் தெரிந்து கொண்டு அதன்படி செயல்பட்டால் மற்றவர்களின் மனது புண்படாது என்று அந்த கீழ்த்தளத்தில் இருந்த போட்டி தேர்வாளர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் பெண் படித்துக் கொண்டிருந்தாள். காற்றாடி மிக வேகமாக சுழன்று கொண்டிருந்தது.

ஆனால் கண்ணீர் மட்டும் நின்றபாடில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *