அந்தக் குடும்பத் தலைவி பத்மஜா அம்மா இறக்கும் தருவாயில் உள்ளார் என்று செய்தி வர ஆரம்பித்து விட்டது. உறவினர்களுக்கும் செய்தி சொல்லப்பட்டது.
கேள்விப்பட்ட அனைவரும் வர ஆரம்பித்துவிட்டனர். வயதும் 84 ஆகி விட்டது. அருகில் 91 வயது கணவன் வாசுதேவன் கவலையுடன் இருக்கிறார்.
மகன், மகளுக்கும் போனில் சொல்லி விட்டார்கள். காரியங்கள் வேகமாக செயல்பட ஆரம்பித்து விட்டது. ஒரு சிறு துடிப்பு இருப்பதாக நம்பப்பட்டது. அனைவரும் அந்த சிறு துடிப்பும் அடங்கக் காத்திருந்தனர்.
கணவன் வாசுதேவன் ஒரு மூலையில் ஒடுங்கிக் கிடந்தார். மிகவும் மிடுக்கான தோற்றம் உடையவர் தான். அவருக்கும் வயது 91 ஆகி விட்டது. மனைவி இல்லாமல் தன் நிலையை யோசிக்க ஆரம்பித்தார்.
தன் 25 வயதில் திருமணம் நடந்தது. அப்போது மனைவி பத்மஜாவிற்கு 18 வயது தான்.
‘‘எப்போதும்’’ இதை எடுத்து வா அதை எடுத்துவா என்று தான் உத்தரவிடுவான். பத்மஜா உடனே செயல்படுவாள். நீங்கள் ஏன் செய்யக் கூடாது என்று எதிர் பேச்சு கிடையாது. அவர் தான் வாசுதேவன் ருசி அறிந்து ஆகாரம் எடுத்து வைப்பாள், அவனுக்கு மிகவும் பிடித்த திருக்கண் அமுதை அடிக்கடி செய்து தருவாள். என்ன செய்தாலும் வாசுதேவன் புகழ்ந்து ஒரு சொல்ல சொன்னதில்லை.
இதற்கிடையில் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அவள் பெயர் கமலினி. எதையும் பத்மஜா பொருட்படுத்தவில்லை. அடிக்கடி அவள் வீட்டில் தங்கி விடுவார். அவள் வீட்டில் சாப்பிடுவதால் அவளுக்கும் சங்கு சக்கர முத்திரையை தோளில் பதிக்க நினைத்தாள்.
ஒரு ஆச்சாரியை அவள் வீட்டிற்கே அனுப்பி வைத்தாள். பத்மஜா வாசுதேவனிடம் சொன்னாள் தீயில் காய வைத்த சின்னங்களால் பொறிப்பார்கள். ஜிவ்வென்று எரியும் தான். தொடர்ந்து 4 நாட்கள் தேங்காய் எண்ணெய் தடவினால் சரியாகி விடும் என்று சொல்லி அனுப்பினாள்.
கமலினி எரிகிறது என்றவுடன் வாசுதேவன் துடித்துப் போனான். வாசுதேவன் கவலை தோய்ந்த முகமாகவே காணப்பட்டார் ஆறும் வரை.
பத்மஜா தன் குழந்தைகள் சுதர்சன், ஸ்ரீகாந்த், மகள் கோதா இவர்களை வளர்ப்பதே தன் கடமை என்று அதில் கண்ணும் கருத்துமாக இருந்தாள். அவர்களும் ஆடிட்டராகவும் பெரிய புகழ்மிக்க வக்கீலாகவும் திகழ்ந்தார்கள். கோதாவையும் பெரிய இடத்தில் மணம் முடித்து விட்டாள். பேரன் பேத்திகளுடன் மகராணியாக வாழ்ந்தாலும் மிகவும் அன்பும் பணிவும் கொண்டே விளங்கினாள்.
வாசுதேவனும் கமலினியின் வீட்டிற்கும் போவதில்லை. தன் ஆடிட்டிங் தொழிலை சீர்பெறச் செய்து வந்தார். பிறகு தொழிலுக்கு விடையும் கொடுத்து ஓய்வு பெற்றார்.
அவளிடமிருந்து தான் விடைபெறுவதை நினைத்தால் தான் துயரம் தாங்க முடியவில்லை. திடீரென ஒரு முடிவு எடுத்தார்.
எல்லோரையும் தன் அறைக்கு வரக் கூடாது என்று கூறி விட்டார். அந்த அறையில் தான் பத்மஜா படுத்திருந்தாள். ஜன்னல்களையும் மூடி விட்டார்.
பத்மஜாவுக்கு பிடித்த தஞ்சாவூர் கதம்பத்தை வரவழைத்திருந்தார். அதில் மல்லிகையும் மரிக்கொழுந்தும் சேர்த்து கட்டியிருப்பார்கள். இடையிடையே வெட்டிவேர் மட்டும் இருக்கும். ஒரு நாள் கூட அந்தக் கதம்பத்தை வாங்கித் தந்ததில்லை. அதை எப்போதாவது பத்மஜா வாங்கிச் சூடிக்கொள்வாள்.
முதலில் அந்தப் பூவை சூடினார். அதன் வாசத்தில் மயங்கினார். ஒரு நாள் கூட நான் இதை நுகர்ந்ததே இல்லையே என்று மறுகினார் மனதிற்குள்.
அந்த ஒளி வீசும் அந்த முகத்தைப் பார்த்தார். மஞ்சள் நிறமான அந்த முகமான இவளை ஒருநாள் கூட உற்றுக் கவனித்ததேயில்லையே என்று விசனப் பட்டார்.
அந்த அழகிய காதில் நீலநிற வைர ‘‘நீல ஜாக்கர்’’ ஒளி வீசியது. இது மட்டும் பத்மஜா வற்புறுத்தி அவனிடம் கேட்டு வாங்கியது. அதை அணிந்து அதன் ஒளியை கவனித்ததே இல்லை. மனதார மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். மூக்குத்தியும் அவரை வாவா என்று அழைத்தது. இவற்றை மனதார ரசித்துப் பார்த்தார்.
அவள் கழுத்தில் மஞ்சள் நிற சரடு தகதகத்தது. அது என்றோ அவர் கட்டியது. தினமும் தன் சரடை கண்ணில் ஒற்றிக் கொள்வாள். எதற்கு என்று கூட கேட்டதில்லை. காரடையான் நோன்பு அன்று மட்டும் புதிதாக சரடு மாற்றுவாள் மிகவும் பயபக்தியுடன். இது தன் ஆயுளை நீடிக்கத்தான் என்று பிறர் சொல்லி கேள்விப்பட்டாள். இன்று வாசுதேவன் நெக்குருகிப் போனான்.
நீண்ட அந்த கைகளை ஆவலுடன் பிடித்து மனம் நெகிழ்ந்தான். அவள் கைகள் எத்தனை சுவையான தளிகைகள் செய்து தந்திருக்கும் அந்த சாத்தமுதை அவன் ருசித்து சாப்பிட்டாலும் ஒரு வார்த்தையாவது பாராட்டியதே இல்லையே. அது அவள் கடமை தானே என்று தானே என்று தான் சொல்லுவான். அதைக் கேட்ட பத்மஜாவும் ஆமாம் என்று தான் சொல்லுவாள்.
இந்தப் பஞ்சு போன்ற மணி வயிறு தானே என் 3 மணிகளையும் பெற்றுத் தந்தது என்று வயிற்றை முத்தமிட்டான்.
பாதங்களைத் தொட்டு வணங்கினான். அவன் திருமணத்தன்று அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அவன் குனிந்து அவள் காலில் போட்ட மெட்டி. அது அவன் மனதை மிகவும் வருடியது. காலங்கள் உருண்டோடினாலும் அவன் போட்டது இன்னும் அப்படியே இருக்கட்டும் என்று தீர்மானித்தான்.
அவன் கை பிடித்தவள் அவள் மூச்சுக் காற்று பட்டதும் பத்மஜாவின் நாடி தளர்ந்தது. அவள் உலர் திராட்சைப் போல் சுருங்கியது போல் கிடந்தாள். வெள்ளரிக்காய் பழமாகி செடியிலிருந்து தானே விடுபட்டது போல் கிடந்தாள். அன்புடன் அவளை அரவணைத்தான்.
ஒரு வாண்டுப் பையன் ஜன்னலை எப்படியோ திறந்தான். அவன் கண்ட காட்சி அவனை செயலற்ற நிலைக்கு கொண்டுவந்தது. வெளியே எல்லோரும் ஏன் இன்னும் வரவில்லை என்று கேள்விக் குறியுடன் நின்றிருந்தனர். அந்த வாண்டு சொன்னான் தாத்தா பாட்டியை லவ் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்று உரத்த குரலில் கூறினான்.
வெளியே வந்த வாசுதேவன், எல்லோரிடமும் சொன்னான் இனிமேல் ஆக வேண்டிய காரியத்தை பாருங்கள் என்றார்.
பத்மஜாவின் இறுதிப் பயண காரியங்கள் மளமளவெனத் தொடங்கின.