சிறுகதை

தெய்வம் நின்று கொல்லும் – ராஜா செல்லமுத்து

வாடகை வீட்டில் குடி இருப்பதென்பது எழுதப்படாத ஒரு நரக வேதனை.. எழுதிவைத்த ரோதனை . அடுத்தவர்களின் கட்டுப்பாட்டில் அடங்கிக் கிடக்கும் ஒரு வினோதமான சிறை. இன்னொருவரின் பேச்சுக்கு அடிபணிந்து நடக்கும் சுயமரியாதையற்ற வாசகம் இந்த கட்டுப்பாட்டிற்குள் தான் . ஒரு மனிதன் வாடகை வீட்டில் வசிக்க முடியும் . எதிர்த்து கேள்வி கேட்டால் அடுத்த வினாடியே வீட்டை காலி செய்யுங்கள் என்ற வார்த்தை குடியிருப்பவர் காதுகளில் வந்து குடியேறும் .

இரவு 7 மணிக்கு மேல் தண்ணீர் பிடிக்கக் கூடாது. 9 மணிக்கு மேல் பிரகாரங்களில் விளக்கு எரியக் கூடாது .சொந்த பந்தங்கள் அப்படி இப்படி என்று யாரும் அறவே வரக்கூடாது என்று சட்ட திட்டங்களை வகுத்து சட்டைப்பையில் வைத்து விடுவார்கள் வீட்டின் உரிமையாளர்கள் .

இது அத்தனையும் ஒப்புக்கொண்டு எத்தனையோ வீடுகளில் குடியிருந்த ராஜா இன்று ஐந்தாவது வீட்டிற்கு வந்து குடியேறினான். அவ்வளவாக தண்ணீர் வசதி இல்லாத குடியிருப்பு. வாசலில் வளர்ந்திருந்த மரம் ஜன்னலைத் தொட்டு காற்று கவரி வீசும்.அதிகாலைச் சூரியன் மென்மையான ஒளிபரப்பும். உச்சியில் வரும் சூரியன் உள்ளங்கால் வரை சூடு பரப்பும். அந்திச் சூரியன் முந்தி விரித்து பந்தி வைக்கும் என்று சொல்லுமளவிற்கு வெளிச்சம் தன் விலாசங்களை வீட்டுக்குள் எழுதியிருந்தது .

தண்ணீர் மட்டும் அந்த வீட்டில் தட்டுப்பாடாக இருந்தது. மற்றபடி அது அறையில் அடைக்கப்பட்ட சொர்க்கம்தான் என்ற அளவிற்கு ராஜா எண்ணியிருந்தான்.

இரண்டு தளங்களைக் கொண்ட அந்தக் குடியிருப்பில் கீழே ஒருவருமில்லை. முதல் மாடியில் இரண்டு வயதான பெரியவர்கள் வசித்துவந்தனர் .ஒப்புக்குக் கூட முகத்தில் சிரிப்பை அப்பிக் கொள்ளாத சுயநலமிக்க மனிதர்கள் .எதையும் தனக்கு என்று பதுக்கி வைத்துக் கொள்ளும் பாசாங்குக்காரர்கள். விரிந்த மனம் இல்லாததால் விரிந்து பரந்த விட்டுக்கொடுக்காத குற்ற உணர்வு உள்ள குரூர புத்தி உள்ளவர்கள்.

மேல்தளத்தில் இரண்டாவது மாடியில் ராஜா குடியிருந்தான். வாடகை வீட்டில் குடி இருப்பதே ஒரு விதமான அவமானம் என்று அவனுக்குள் வேரூன்றி இருந்தது.

அதுவும் இந்தக் குரூர மனிதர்கள் உள்ள அந்த வீட்டில் அவனின் சவுகரியம் சற்று தள்ளியே இருந்தது .

வாய்விட்டு சிரித்து பேச்சுக் கொடுத்து உறவாடி உறவாடும் மனிதர்கள் அங்கு இல்லை என்பது அவனுக்குத் தெரியும்.

ஆனால் அந்த முதல் மாடியில் கூடியிருந்தவர்கள் முதல் மாடியிலிருந்து ராஜா இரண்டாவது மாடிக்கு செல்லும் வழியில் குறுக்கே பலகை வைத்து அடைத்து பின்னால் ஒரு மண் வாளியை வைத்திருந்தார்கள்.

இரவு நேரங்களில் வேலை முடிந்ததும் ராஜா மேலே ஏறும்போது, அந்த மரப்பலகை தடுப்பு அவனுக்கு சிரமமாக இருந்தது .

இத எதுக்கு வச்சிருக்கீங்க? என்று அந்த மகா புண்ணியவான்களிடம் கேட்டபோது

இங்கே எலி வருகிறது. வீட்டுக்குள் வந்து தொந்தரவு செய்யும் என்று தடுப்புச்சுவர் வைத்ததற்கான காரணத்தை சொன்னார்கள் .

ஆள் உயரம் வளர்ந்த பூனை இருக்கிறது. அனைத்துக்கும் சத்தம் அதிலிருந்து கேட்கிறது. இதற்கு மேல் இங்கு எலி வெளிவருகிறதா? இதென்ன ஆச்சரியம் என்று பதில் சொன்னான் ராஜா.

அதெல்லாம் இல்ல இங்க பெருச்சாலி வருது. அதுக்கு தான் நாங்க தடுப்புச்சுவர் வச்சு இருக்கோம் என்று சொன்னது அந்தப் பெரிசு .

சிறிது நாட்களுக்குப் பிறகு கீழே இருக்கும் கேட்டை பூட்டி விட்டார் அந்த வயது முதிர்ந்தவர். மேலே மரத் தடுப்பு, கீழே பூட்டு என்று அந்த வீட்டை அவரின் மொத்த ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வந்திருந்தார். ஒரு பிணைக்கைதி போல அந்த வீட்டை அவர் பாதுகாத்து வந்தார் .

ஒரு நாள் இரண்டு நாள் என்று இம்சைகள் தொடர்ந்தன. ராஜா குடியிருக்கும் வீட்டின் ஓனரிடம் புகார் செய்தால் அவர்கள் அதைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

இனிமேல் இந்த வீட்டில் இருக்கலாகாது என்று எண்ணி. இதை காலி செய்து விட வேண்டும் என்று நினைத்தான் ராஜா.

ஆனால் அந்த வெளிச்சம் மிகுந்த இல்லத்தை விட்டு கொடுப்பதற்கு மனது வரவில்லை .

தண்ணீர் ஒரு பற்றாக்குறைதான். ஆனால் சவுகரியம், சந்தோசம் இந்த வீட்டைப் போல் வேறு எங்கும் கிடைக்காது என்பது அவனுக்கு தெள்ளத் தெளிவாக தெரிந்தது.

கொஞ்சம் தயங்கினான். வாடகையும் அவ்வளவு பெரிதல்ல. கொஞ்சம் பல்லைக் கடித்துக் கொண்டு நாட்களை நகர்த்தலாம் என்று நினைத்தான்.

தண்ணீர் இல்லாத நாட்களில் சம்பளத்திற்கு ஆள் வைத்து கூட தண்ணீர் நிரப்பினான்

ஆனால் இரவில் அவர் பலகை தடுப்பு வைப்பதை விடுவதுமாக இல்லை.

சொல்லிச் சொல்லி பார்த்த ராஜா ஒருகட்டத்தில் சோர்ந்துபோய் விட்டுவிட்டான்.

நாட்கள் நகர்ந்தன

என்ன ஒரு ஆச்சரியம்? அந்த வீட்டில் இருந்த வயதான அந்தக் கிழவர் நடப்பதற்குக் கூட சக்தியில்லாமல் தன் மனைவியின் தோளைப் பிடித்துக்கொண்டு நடந்தார்.

இதற்கு முன்னால் அவர் அந்தப் படிகளில் அமர்ந்து பீடி குடிப்பதும் சாராயம் குடிப்பதும் அந்த வீட்டை ஒரு விதமாக வைத்திருந்தார்.

தன் மனைவியை ஏசுவார். ஆனால் இன்று தான் கட்டிய மனைவியும் தோளைப் பிடித்துக்கொண்டு நடந்து கொண்டிருந்தார். அவரின் உடல் நலக்குறைவு தொடர்ந்து கொண்டிருந்தது.

ஒரு நாள் மேல் மாடியில் இருந்து கீழே பார்த்தான் ராஜா.

அந்த வயதான கிழவர் மனைவின் தோளைப் பிடித்துக் கொண்டு நகர்ந்து வந்து கொண்டிருந்தார் .

அப்போது அவனுக்கு ஒரு உண்மை தெரிந்தது மனிதன் நடக்கும் இடத்தை வழிமறித்து அதனை பலகை தடுப்பு போட்டு நடக்கவிடாமல் செய்ததால்….. இந்தமனிதர் அவருக்கு அவரே தண்டனை கொடுத்து இருக்கிறார்

நடக்கும் பாதையை அடைந்தவர் வெளிச்சம் வெளிக்காற்று இன்றி அவரே பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் முடக்கி இருக்கிறார்.

எல்லாச் செயலையும் இறைவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான்.

நல்லது செய்தால் உனக்கு நல்லது நடக்கும். கெட்டது செய்தால் உனக்கு கெட்டது நடக்கும் என்பது ராஜாவிற்கு வெளிச்சமானது.

தெய்வம் நின்று கொல்லும் என்ற ஓர் உண்மை

ராஜாவின் மனதில் தெரிந்தது.

Leave a Reply

Your email address will not be published.