செய்திகள்

தென் மாவட்டங்களில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

சென்னை, செப். 15–

டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் 5 நாட்கள் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

16–ந்தேதி முதல் 19–ந்தேதி வரை தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஓரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லாரில் 3 செ.மீ. மழையும், தேவலாவில் 2 செ.மீ. மழையும், வால்பாறை, கூடலூர் பஜார், தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *