சியோல், மே 2–
முன்னாள் தென் கொரிய பிரதமர் ஹான் டக்-சூ, ஜூன் மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதுடன் நாட்டின் அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டு வந்து ஜனாதிபதியின் பதவிக்காலத்தை குறைக்கவும் உறுதி அளித்துள்ளார்.
தென் கொரியாவில் ஜூன் 3-ம் தேதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக இருந்த பதவியை ஹான் வியாழக்கிழமை ராஜினாமா செய்தார். முன்னாள் பிரதமரான ஹான், ஜனநாயக கட்சியின் லீ ஜே-ம்யூங்கை எதிர்த்து போட்டியிடக்கூடிய சாத்தியமான வேட்பாளர்களில் மிகவும் நம்பிக்கைக்குரியவராக கருதப்படுகிறார்.
“நான் நேசிக்கும் கொரிய குடியரசின் எதிர்காலத்திற்காகவும், நம்மனைவருக்காகவும் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் நம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எனது முழு முயற்சியையும் செய்வேன். தற்போது, தென் கொரியாவின் அரசியலமைப்புபடி ஜனாதிபதி பதவி காலம் 5 ஆண்டு காலம் என உள்ளதை, மூன்று ஆண்டுகளாக குறைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
அதிகாரம் குறைக்கப்படும்
மேலும், நான் தென்கொரிய ஜனாதிபதியாக வந்தால், ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைத்து, நாடாளுமன்றத்துடன் பகிர்ந்து கொள்வேன் என்றும் அமெரிக்காவின் புதிய வர்த்தகக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்க்கவும் வாக்குறுதி அளித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-யோல், சில சட்ட சிக்கல்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், ஹான் டக்-சூ முக்கிய வேட்பாளராக கருதப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இது குறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறும்போது, தென் கொரியாவில் அரசியல் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. முன்னாள் பிரதமர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால் ஹான் வெற்றி பெற்றால், நாட்டின் சட்டத்தில் பெரிய மாற்றங்கள் வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.