தலையங்கம்
நேற்று தென் கொரியாவில் துவங்கிய 21வது அதிபர் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பில் மக்கள் பங்கேற்பு அதிகமாக இருப்பது வரவேற்கப்பட வேண்டியதுடன் பிற ஜனநாயக நாடுகளும் பின்பற்ற வேண்டிய ஒன்றாகவும் இருக்கிறது.
வாக்காளர் பங்கேற்பு சவால்கள் மற்றும் டிஜிட்டல் தீர்வுகளின் பயன்பாடு முழுமையாக போராடும் இந்தியாவைப் போன்ற ஜனநாயக நாடுகளுக்கு ஒரு சிறந்த முன்மாதிரி உதாரணமாகும்.
தென் கொரியாவில் முன்னாள் அதிபர் யூன் சுக் யோல் பதவி நீக்கம் செய்யப்பட்டதால் திடீர் தேர்தல் நடத்தப்பட்டது, இது நாட்டை அரசியல் நிச்சயமற்ற தன்மையில் ஆழ்த்தியது. தாராளவாத ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான லீ ஜே-ம்யங் உட்பட ஆறு வேட்பாளர்கள் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதால் சவால்கள் மிக அதிகம். புதிய அதிபர் ஒரு பிளவுபட்ட தேசத்தை ஒன்றிணைத்து அதன் மூழ்கிக் கொண்டு இருக்கும் பொருளாதாரத்தை எதிர்நீச்சல் போட்டு உயிர்த்தெழு வைத்தாக வேண்டும்.
மாற்றம் தானே நிரந்தரம் என்பதை மீண்டும் மீண்டும் நமக்கு நினைவூட்டி வரும் தேர்தல் முடிவுகள் வரிசையில் இம்முறையும் கொரியாவில் தேர்தல் முடிவுகள் மக்கள் நலன் காக்கும் நல்லாட்சியை தரும் தலைவரை பதவியில் அமர்த்தும் என எதிர்பர்க்கலாம்.
2014 இல் நிறுவப்பட்ட தென் கொரியாவின் முன்கூட்டிய வாக்களிப்பு முறை அமுலுக்கு வந்தது. அதன்படி அதிகாரப்பூர்வ தேர்தல் நாளுக்கு ஒரு வாரம் முன்னதாகவே நாட்டின் 3,569 வாக்குச் சாவடிகளில் ஏதேனும் ஒன்றில் குடிமக்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்த அனுமதிக்கிறது.
ஜூன் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வ தேர்தல் நாளில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தேசிய தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின்படி, வியாழக்கிழமை காலை 11 மணி நிலவரப்படி, 7.0 சதவீத வாக்குப்பதிவு விகிதத்துடன், 3.1 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் ஏற்கனவே வாக்களித்துள்ளனர்.
இந்தியாவில் தேர்தல் நாள் எப்போதும் ஒரு பொது விடுமுறை நாளாக இருப்பதால் விடுமுறை விளைவு” வாக்களிப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
தேர்தல் நாளை ஒரு நீண்ட வார இறுதியாகக் கருதுகின்றனர். ஜடி துறையில் பணியாற்றி வரும் இளைஞர்கள் இப்படிப்பட்ட விடுமுறையைக் கொண்டாட பலகாரணங்கள கூறலாம், ஆனால் பாதிப்பு ஜனநாயகத்திற்குத்தான்.
தென் கொரியாவின் முன்கூட்டிய வாக்களிப்பு முறை, தேர்தல் நாளைக் குறித்த இறுக்கமான கட்டுப்பாடுகளிலிருந்து வாக்களிப்பை விடுவிப்பதன் மூலம் தேர்தல் ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கான ஒரு புதுயுத்தியாகவும் இருக்கும்.
பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் ஆன்லைன் வாக்களிப்பில் முன்னேற்றம் கண்டுள்ளதை அறிவோம்.
நிதி பரிவர்த்தனைகளுக்கான டிஜிட்டல் கட்டமைப்பு பலமானதாக உருவாக்கி விட்டோம், ஆனாலும் ஆன்லைன் தேர்தல் முறைகளைத் தழுவ மிகவும் தயங்குகிறோம்.
வாக்காளர் பட்டியலை கையாளுதல் மற்றும் கள்ள ஓட்டு குறித்த பரவலான அச்சம் ஒரு பெரிய தடையாக உள்ளது.
இந்தியா QR குறியீடுகள், ஒருமுறை கடவுச்சொற்கள் (OTPs) மற்றும் அதிநவீன டிஜிட்டல் குறியாக்கத்தைப் பயன்படுத்தி நிகழ்நேர பணப் பரிமாற்றங்களை பாதுகாப்பாக நடைமுறைபடுத்தியதுடன் சாமானியனும் எளிதாக பயன்படுத்தி உபயோகிக்க கூடியதாக இருக்கிறது.
ஆனாலும் ஆன்லைன் வாக்களிப்பு முறையை நடைமுறைப்படுத்த தயங்குகிறோம்.