செய்திகள் நாடும் நடப்பும்

தென் கொரியாவின் புதிய தேசிய பாதுகாப்பு யுத்திகள், இந்தியாவிற்கு நல்ல வழிகாட்டி


ஆர்.முத்துக்குமார்


தென் கொரியா சமீபத்தில் அவர்கள் நாட்டின் நலனுக்காக தேசிய பாதுகாப்பு யுத்திகள் பற்றிய விரிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன் பல அம்சங்களை வரும் காலத்தில் இந்தியாவும் பின்பற்றினால் நலன் தருமே என எண்ண வைக்கிறது.

நாம் ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலைபெற்றது போல், ஜப்பானிடம் இருந்து 1945–ல் விடுதலைப் பெற்ற கொரியா, இந்தியா – பாகிஸ்தானாய் பிறந்தது போன்றே வட, தென் கொரியாக்கள் உருவாகின்றன.

சென்ற வாரம் தென் கொரியா பிரதமர் வெளியிட்டு இருக்கும் தேசிய பாதுகாப்பு யுத்திகள் அதாவது National security strategy அறிவிப்பில் உள்ள மூன்று முக்கிய யுத்திகள்:

* தேசிய இறையாண்மையை பாதுகாத்தல், ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பை மேம்படுத்துதல்.

* கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலை நாட்டுதல் மற்றும் எதிர்கால ஐக்கியத்திற்கும் தயார் செய்தல்.

* கிழக்கு ஆசியாவின் செழிப்பிற்கு அடிதளம் அமைத்தல் மற்றும் உலகலாவிய நிகழ்வுகளில் நமது பங்கை அதிகரித்தல்.

இதில் இரண்டாவதாக குறிப்பிடப்பட்டு இருக்கும் ஐக்கியம் தற்போது எலியும்– பூனையுமாக இருக்கும் வட, தென் கொரியா நாடுகளுக்கானது ஆகும்.

நாமும், பாகிஸ்தானும் இணைந்து செயல்பட பிற்காலத்திலாவது வழியுண்டா? இதுபற்றி நம் அரசுகளின் தரப்பில் பேசப்பட்டால் அது ஏதோ மத, இன அரசியல் அல்லது பிரிவினைவாதிகளின் சூழ்ச்சியாக அல்லவா கருதப்படும்?!

உண்மை அதுவாகக் கூட இருக்கலாம் என்ற அச்சமும் இருக்கத்தான் செய்கிறது.

இதே சிக்கலை தென் கொரியா எப்படி அணுகப்போகிறது தெரியுமா? அந்த திட்ட வரைவில் குறிப்பிட்டு இருப்பது… ‘நமது இசை, நாட்டிய குழுக்களை இரு நாட்டு மக்களிடம் நிகழ்ச்சிகள் நடத்திட வைக்க வேண்டும்’ என்கிறது.

அரசியல் மற்றும் ராஜ தந்திரங்கள் இரு நாடுகளை பிரித்து விட்டால், விரோதம் காரணமாக சந்தேகக் கண்களால் மட்டும்தானே ஒருவரை ஒருவர் பார்த்து பாதுகாப்பு விவகாரங்களை வலுப்படுத்துவார்கள்.

ஆனால் என்றேனும் இரு நாடுகளின் கலைகளில் உள்ள அதே அம்சங்கள் மக்களின் மனதில் நெருக்கத்தை ஏற்படுத்தலாம் அல்லவா? இது Soft Diplomacy அதாவது மென்மையான ராஜதந்திர யுக்தியாகும்.

ஐரோப்பிய நாடுகளிடையே இருந்த பிளவுகள், மனக்கசப்புகளை சரி செய்து கொள்ள இப்படி கலை மற்றும் கலாச்சார தூதுவர்களை அனுப்புவதும், வரவேற்பதும் உண்டு.

பிரிந்து இருந்த கிழக்கு, மேற்கு ஜெர்மனிகளின் ஐக்கியத்தின் பின்னணியில் அரசியல் மற்றும் ராணுவ சமாச்சாரங்களுடன் இந்த மென்மையான ராஜ தந்திரமும் மிகப் பெரிய பங்காற்றி இருக்கிறது. 1989–ல் இரு நாட்டு மக்களும் இணைந்து செயல்பட்டால் பொருளாதார ரீதியாகவும், அரசியல் அமைப்பு வலுவானதாகவும், மக்களின் நலன் காக்கும் அமைப்பாகவும் மாறும் என்று உணர முடிந்தது.

தென் கொரியாவின் யுத்திகளில் உலக நிகழ்வுகளில் தங்களது பங்களிப்புகளை அதிகரித்துக் கொள்வது என்பதில் ஐப்பானுடனான கசப்பான அரசியலால் தடைகள் கண்டு வருவதை அறிவோம்.

அமெரிக்காவுக்கும் ஜப்பானை பிடிக்காது தான், அணுகுண்டை வீசி பல லட்சம் அப்பாவி ஜப்பானியர்களை கொன்று குவித்தனர் அல்லவா?

ஆனால் ஜப்பானின் கார் தயாரிப்பு மேன்மையையும், தொழில்நுட்ப வல்லமையையும் அமெரிக்கா விரும்பி ஏற்கிறது, ஜப்பானும் அதைத் தர கெடுபிடிகள் எதுவும் செய்வதில்லை.

வட கொரியாவில் ஏவுகனை சோதனை நடத்தும்போதெல்லாம் அருகாமை நாடான ஜப்பான் அச்சத்தை வெளியிடும் போதெல்லாம் அமெரிக்காவுக்கும் ஜப்பான், தென் கொரியாவின் பாதுகாப்புக்காக வட கொரியாவை தட்டிக் கேட்க தயங்குவது கிடையாது.

வட கொரியா மீது பொருளாதார தடையை அறிவித்தும் அமெரிக்காவின் அறிவுறுத்தலால் தான் என்பதையும் உலகம் அறியும்.

இரண்டு நாட்களுக்கு முன்பும் கூட வடகொரியா நடத்திய ராட்சத ஏவுகனை சோதனையை கண்டு எதிர்ப்பை வார்த்தைகளால் மட்டும் வெளியிடாமல் அமெரிக்கா போர் கப்பல் படையையும் வட கொரியாவின் அருகாமையில் நிலை நிறுத்தி விட்டது.

ஜப்பானும், தென் கொரியாவும் இப்படி திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்திவிட்டால் அதை தடுக்கும் வல்லமை இருக்குமா? என யோசித்துக் கொண்டு இருக்கையில் எங்களிடம் அந்த திறன் கொண்ட பாதுகாப்பு வளையத்தை கொண்ட கப்பல் படையை நிலை நிறுத்தி உள்ளோம் என்று அமெரிக்கா உறுதி தந்துள்ளது.

இத்தகைய இறுக்கமான அரசியல் எதிர்மறை அம்சங்கள் நிலவினாலும் தென் கொரியா வரும் காலத்தில் வட கொரியாவுடன் ஐக்கியமாகி செயல்பட வழிகாணும் விதமாக செயல்திட்ட உருவாக்க நடவடிக்கைகள் எடுக்க தயாராவோம் என்று ஓர் தேசிய பாதுகாப்பு உத்தியை அறிவித்து இருப்பது வருங்கால சந்ததியினர் மீதுள்ள அக்கறையைக் காட்டுகிறது.

இந்தியாவிற்கு எல்லைப்புற தலைவலிகளில் மிகப் பெரியது பாகிஸ்தான் ஆகும்.

நேபாளம், பங்களாதேஷ், வியட்நாம் போன்ற கிழக்கு எல்லைப்புற நாடுகள் சீனாவின் ஆதிக்கத்தால் ஏதேனும் புதுப்புது தலைவலிகளை தந்து கொண்டு தான் இருப்பார்கள்.

ஆனால் இந்த நாடுகளிடம் நாம் பரஸ்பர அன்பை வெளியிட்டால் நாம் ஏதோ வலுவிழந்து சரண் அடைந்து விட்டது போல் பிற நாடுகள் பார்க்க ஆரம்பித்து மேலும் புதுப்புது தலைவலிகள் தர வாய்ப்புகள் இருக்கிறது.

நாம் எப்போதும் பங்களாதேஷ், நேபாளம், இலங்கைக்கு அவசரக் கால உதவிகள் செய்வதில் தவறியதே கிடையாது.

அதே நட்புக்கரத்தை பாகிஸ்தானுக்கு நீட்டும் உரிய சூழல் இதுவரை உருவாகவில்லை. ஆனால் 10 ஆண்டுகளில் கிரிக்கெட் போட்டிகளோ, திரைப்பட பரிமாற்றமோ, கலை, கலாச்சார குழுமங்களை நம் இரு நாடுகளுக்கிடையே நட்பு பாலமாக அமைக்க அடி எடுத்து வைப்பதில் வர இருக்கும் தலைமுறை உண்மையான மகிழ்ச்சியான மண்ணில் பிறந்து வளர்ந்த பூரிப்பை பெறுவார்கள். அது எப்படி, எப்போது என்பதைப் பற்றி ராணுவ அதிகாரிகளிடம் மட்டுமின்றி தொழில், விளையாட்டு, திரையுலக ஜாப்பவான்களுடன் கலந்து ஆலோசித்து புதிய திட்ட எண்ணத்தை விதைத்தாக வேண்டியதை மறந்து விடக்கூடாது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *