செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா 3வது அலை: பிரதமர் எச்சரிக்கை

காவ்டெங், மே 17–

தென் ஆப்பிரிக்காவின் பொருளாதார மையமாகத் திகழும் காவ்டெங் மாகாணத்தில் கொரோனா 3வது அலை பரவி வருவதாக அந்நாட்டின் பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் டேவிட் மக்குரா தெரிவித்துள்ளதாவது:

தென் ஆப்பிரிக்கா முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை பரவவில்லை என்றாலும் காவ்டெங் மாகாணத்தில் பரவத் துவங்கியுள்ளது. கடந்த வாரத்தில் செவ்வாய் முதல் வியாழன் வரையிலான 3 நாட்களில் அந்த மாகாணத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 600-ல் இருந்து 1,200-ஆக அதிகரித்துள்ளது. இரண்டு அல்லது நான்கு நாட்களில் தொற்றுப் பரவல் இருமடங்கு ஆவது அபாயகரமானது.

காவ்டெங் மாகாணத்தில் கடந்த பல வாரங்களில் முதல்முறையாக கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை 15 லட்சத்து 20 ஆயிரம் பேர் பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பரவல் அதிகரித்திருந்தாலும் பொது முடக்கத்தை அமல் படுத்த முடியாது. பொது முடக்கத்தால் பொருளாதாரத்தை முடக்க முடியாது. எனவே, அது நடக்காமல் இருக்க பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *