செய்திகள்

தென் ஆப்பிரிக்காவிண் புதிய வகை கொரோனா வைரசுக்கு ‘ஓமைக்ரான்’ என்று பெயர்

அதிகமான பரவல் தன்மை கொண்டது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனிவா, நவ. 27–

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதியவகை பி.1.1.529 கொரோனா வைரசுக்கு உலக சுகதாார அமைப்பு “ஓமைக்ரான்” என்று பெயரிட்டுள்ளது. இந்த புதிய வகை வைரஸ் அதிகமான பரவல் தன்மை கொண்டது, இது கவலைக்குரியதாக இருக்கிறது என்று உலக சுகதாார அமைப்பு தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் தான் முதல்முறையாக இந்த பி.1.1.529 வகை வைரஸ் கடந்த வாரம் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது. இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக இந்த வைரஸ் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். குறிப்பாக போட்ஸ்வானா நாட்டில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு கூட இந்த புதிய வைரஸ் தாக்கியுள்ளது.

இந்த புதிய வகை வைரஸ் குறித்து முழுமையாக தெரியாத நிலையில், இந்த வகை வைரஸ், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டவை, வேகமாகப் பரவும், அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

இந்த புதியவகை வைரஸ் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பின் அவசர ஆலோசனை மற்றும் சிறப்புக் கூட்டம் நேற்று ஜெனிவாவில் நடந்தது.

இந்தக் கூட்டத்துக்குப்பின் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:– “தென் ஆப்பிரிக்காவில் டெல்டா வகை வைரசால்தான் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தொற்று பாதிப்பு குறைந்திருந்த நிலையில், திடீரென கடந்த சில வாரங்களாக தொற்று அதிகரித்தது. இது தொடர்பாக நடந்த ஆய்வுகள், கடந்த 9ம் தேதி எடுக்கப்பட்ட மாதிரிகளில் புதிய வகை கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

முதல்முறையாகக் கண்டறியப்பட்ட புதிய வகை வைரசுக்கு (பி.1.1.529) ‘‘ஓமைக்ரான்’’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மிகுந்த கவலைக்குரியதாக இருக்கிறது. இந்த வைரஸை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், அதன் உருமாற்றம், தொடர்புகள், எவ்வாறு எதிர் வினையாற்றுகிறது என்பதை ஆய்வு செய்யவேண்டும்.

முதல்கட்ட ஆய்வில் ஓமைக்ரான் வைரஸ் அதிகமான பரவல் தன்மை கொண்டதாகவும், அதிகமான உருமாற்றம் அடையும் தன்மை கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ புதிய வகை கொரோனா வைரஸான ஓமைக்ரான், ஏராளமான உருமாற்றங்களைக் கொண்டிருக்கிறது, பெரும் கவலையளிக்கிறது. ஆதலால், நம்முடைய கொரோனா தடுப்பு வழிமுறைகளான தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *