திருவனந்தபுரம், ஜூன் 10–
கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் வரை மழை பொழிவு இருக்கும். இந்த ஆண்டு ஒரு வாரம் தாமதமாக தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. ஜூன் 8ஆம் தேதி கேரளா, தென் தமிழ்நாடு, மன்னார் வளைகுடா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனிடையே, வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
மஞ்சள் எச்சரிக்கை
மேலும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள பைபர்ஜோய் புயல், அடுத்த 36 மணி நேரத்தில் மீண்டும் தீவிரம் அடைந்து வடகிழக்கு திசையிலும், அடுத்த 3 நாட்களில் வடமேற்கு திசையிலும் நகரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாகவும் கேரளாவில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா உள்பட 8 மாவட்டங்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.