சென்னை,பிப். 2–
தென் மாவட்டங்களில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையின் மட்டக்களப்பு – திரிகோணமலைக்கு இடையே அதிகாலை 3.30 மணியில் இருந்து 4.30 மணிக்குள் கரையை கடந்தது. இது மேலும் தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நாளை காலை நிலவக்கூடும்.
இதன் காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக வேதாரண்யம் – 7 செ.மீ., கோடியக்கரை, திருப்பூண்டி தலா 6 செ.மீ., தலைஞாயிறு, நாகப்பட்டினம் தலா 4 செ.மீ., வேளாங்கண்ணி, காரைக்கால், கொள்ளிடம், பாம்பன் தலா 3 செ.மீ. மழை பெய்யதுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
3 மாவட்டங்களில்
பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் தென்கடலோர மாவட்டங்களில் கடந்த 2 நாள்களாக கனமழை பெய்து வருகின்றது. நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துறைமுகத்தில்
3ம் எண் புயல் கூண்டு
பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று காலை ஏற்றப்பட்டது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சுமார் 45 கி.மீ. வேகத்தில் புயல்காற்று வீசக்கூடும் என்பதால்,
இதுகுறித்து மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் மற்றும் பாம்பன் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு இன்று காலை ஏற்றப்பட்டுள்ளது.