வெவ்வேறு கருத்துக் கணிப்புகளில் தகவல்
சென்னை, ஏப். 01–
தென்னிந்தியாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மிக குறைவான எண்ணிக்கையில்தான் வெற்றிபெறும் என்று 2 வெவ்வேறு தேர்தல் கருத்து கணிப்புகளில் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாட்டில் கட்சியின் நிலை குறித்தும் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ‘லோக்பால்’ என்ற பிரபல கருத்து கணிப்பு நிறுவனம் தமிழ்நாடு அரசியல் நிலவரத்தை கணித்துள்ளது.
அதில், மொத்தமாக தென்னிந்தியாவில் உள்ள 132 நாடாளுமன்ற தொகுதிகளில், இந்தியா கூட்டணி 78 முதல் 82 இடங்களை வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 28 முதல் 34 இடங்களை மட்டுமே பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கூட்டணிகளிலும் இல்லாத ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 10 முதல் 11 இடங்களை வெல்லும் என்றும் மற்றவர்கள் 2 முதல் 6 இடங்களை வெல்வார்கள் என்றும் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
என்டிஏ கூட்டணிக்கு–24
அதுதவிர,பிரபல கருத்து கணிப்பு நிறுவனமான சி வோட்டர் நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் இருந்த சுரேஷ் குமார் என்பவர் மூலம் அக்னி நியூஸ் என்ற செய்தி நிறுவனம் சார்பாக தென்னிந்தியா தொடர்பான இன்னொரு கருத்து கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
அந்த கருத்து கணிப்பில், தென்னிந்தியாவில் உள்ள மொத்த இடங்களான 132 நாடாளுமன்ற தொகுதிகளில் கர்நாடகாவில் தேவகவுடா கட்சி கூட்டணியுடனும், ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணியுடனும் தெலங்கானா உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சேர்த்து மொத்தமாக பாஜக பெறும் இடங்கள் 24 மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தென்னிந்தியாவில் இந்தியா கூட்டணி மொத்தம் 95 நாடாளுமன்ற தொகுதிகளில் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கூட்டணிகளிலும் இல்லாத ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும் மற்றவை 3 இடங்களில் வெல்லும் என்று இந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.