கேப்டவுன், ஏப். 17–
தென்னாப்பிரிக்காவில் பெய்த பெரும் புயல் மழையால் 400 பேர் பலியாகி உள்ளனர்.
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு மாகாணமான குவாசுலு – நடாலில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்துள்ளது. பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மருத்துவமனைகள், வீடுகள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. சுமார் 40 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.
400 பேர் பலி
ஈஸ்டர் விடுமுறையில் வழக்கமாக சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் குவாசுலு – நடால் நகரம் இந்த ஆண்டு வெள்ளத்தினால் களையிழந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி 398 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 27 பேரை காணவில்லை எனவும் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ராணுவத்தினர், போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வெள்ளத்தினால் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளும், 50-ற்கும் மேற்பட்ட மருத்துவமனைகளும் சேதமடைந்துள்ளன. சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். அவசர கால நிவாரண நிதியாக தென்னாப்பிரிக்க அரசு 68 மில்லியன் டாலர்களை அறிவித்துள்ளது.