சிறுகதை

தென்னம் பிள்ளை (ராஜா செல்லமுத்து )

“ஓங்கியடித்துக் கொண்டிருந்த புயலில் ஒடிந்து விழுந்தன உயரமான மரங்கள். சரிந்து விழுந்தன ஜன்னல் வீடுகள். ஊருக்கெல்லாம் குறி சொல்லிக்கொண்டிருந்த குருசாமியின் வீடும் நொறுங்கி விழுந்தது. அவர் சொன்ன மாய மந்திர வித்தைகள் எல்லாம் மழையில் கரைந்து மாயமாகின. அவர் தோட்டத்துத் தென்னைமரங்கள் புயலில் ஆடிஆடி விழுந்து கொண்டிருந்தன.

அவர் வீட்டினுள்ளிருந்து உச்சரிக்கும் உச்சாடன வார்த்தைகள் ஒன்றுக்குக் கூட கட்டுப்பட்டு எந்த மரங்களும் நிற்கவே இல்லை. தரை வரை தொட்ட மரக்கிளைகள், பூமிமீது பட்டு வேர்களை விலாசம் கேட்டது. மந்திரங்களைக் கேட்ட நொடிகளிலேயே எங்கிருந்து எழுந்ததோ அந்தப்புயல். அதே பூமியில் முறிந்து விழுந்தன வேர்களோடு மரங்கள் .

குருசாமி கொந்தளித்துப் போய் குமுறினார். அவர் குடியிருந்த வீடும் படபடவென இடிந்து விழுந்தது.

“ஐயய்யோ …. என்வீடு போச்சே” என்ற அலறலோடு வீட்டை விட்டு வேகமாக ஓடினார் குருசாமி. புறப்பட்ட புயல் அதன் வேகத்திலே அடித்துக் கொண்டிருந்தது. குருசாமியோடு அவர் குடும்பமும் உயிரைக் கையில் பிடித்தபடியே ஓடியது. என்னங்க இப்படி புயல் காத்து மழைன்னு அடிக்குதே. எங்க போறது? என்று கேட்ட மனைவியின் கேள்விக்குப் பதில் சொல்லவே முடியாமல் ஓடினார் குருசாமி.

அவர் பின்னாலே அவர் பிள்ளைகளும் ஓடினர்.

ஊரே கலவரம் கண்டு கொண்டது போன்று உருக்குலைந்து கிடந்தது.

குருசாமியும் குடும்பமும் தெருவழியே ஓடிக் கொண்டிருந்தார்கள்.

ஏற்கனவே வீடுகளை இழந்த குடும்பங்கள் குமுறிக் கொண்டிருந்தனர்.

‘‘இப்படி ஆகிப் போச்சுங்களே.எதுவும் நம்ம கையில இல்லீங்க. இயற்கை ….. நாம என்ன செய்ய முடியும் என்ற ஏக்கத்தோடு வெளியேறிய கூட்டம் பாதுகாப்பான ஒரு இடம் தேடி அடைக்கலமானது. கூடி நின்ற கூட்ட மரங்கள் கொத்துக் கொத்தாய் வேரோடு சாய்ந்து விழுந்தன.

குலைதள்ளிக்காய்த்துக் கிடந்து பிள்ளைகளைப் போல வளர்ந்து பிள்ளைகள் தராத செல்வ வளங்களை மாதாமாதம் தந்த தென்னை மரங்கள் ஒடிந்து விழுந்ததைப் பார்த்து “ஓ” வென ஒப்பாரி வைத்தாள் ஒரு பெண். தன் கடைசி உயிரை வேர்களிடம் விட்டு விட்ட தென்னை மரங்கள் தன் பலங்கொண்ட மட்டும் பாளைகளால் உயிர் பிடித்து நிற்க முயற்சி செய்து, முயற்சி செய்து இறுதியில் முறிந்தே விழுந்தது.

எவ்வளவோ குடும்பங்களைக் காப்பாற்றிய குலை தள்ளிய தென்னைகள் குப்புற விழுந்து கிடந்ததைப் பார்த்த குருசாமி குமுறிக் குமுறி அழுதார்.

அவர்குமுறலை புயலின் எந்தச் செவியும் கேட்கவில்லை . அத்தனையும் ஒடித்து விட்டே ஓய்ந்தது. பிள்ளைகளைப் போல் பெற்றெடுத்த பிள்ளை மரங்கள் புயலால் பிய்த்து வீசப்பட்டன.

“முப்பது வருசமா பார்த்து வளர்த்த மரங்க இப்படி முறிஞ்சு போச்சே. குருசாமி குமுறிய குமுறல் அவர் குடும்பத்தையே நிலைகுலையச் செய்தது.

முடியாது முடியாது இனிமே நாம இங்க வாழ முடியாது.நிம்மதியா வாழவே முடியாது. வாழவே முடியாது என்று அழுத குருசாமி அப்படியே உட்கார்ந்தார்.

‘‘என்னங்க… என்னங்க”

“என்னாச்சு….. ஐயய்யோ என்னங்க ’’என்று சாய்ந்து கிடந்த மரங்களுக்கு நடுவே அப்படியே உட்கார்ந்த குருசாமியை குடும்பமே தட்டித்தட்டித் தூக்கியது.

ம்ஹூகும்… அவர் அசைவேனா என்றிருந்தார்.

“என்னங்க அவர்கள் போட்ட சத்தத்தில் அடித்த புயல், அப்படியே கொஞ்சம் அடங்கி நின்றது.

இங்க வாங்க. என்னோட வீட்டுக்காரருக்கு என்னமோ ஆயிருச்சு மூச்சு பேச்சு இல்லாம இருக்கார் என்னான்னு ஒரு எட்டு பாருங்க “என்று அழுது புலம்பியவளின் அருகே ஆட்கள் ஓடிவந்தார்கள்.

என்னாச்சு? என்னாச்சு என்று குப்புறக்கிடந்த குருசாமியைத் தூக்கி அப்படியே உட்கார வைத்தனர்.

“மூச்சுப் பேச்சு இல்லாம இருக்கே” என்று நாடி பிடித்துப் பார்த்த ஒருவர் அப்படியே உறைந்து உட்கார்ந்தார். என்னாச்சு என்றவரின் கேள்விக்கு மௌனத்தையே பதிலாகத்தந்தவரின் பதிலால் புரிந்து கொண்டனர் சுற்றியிருந்த மக்கள்.

குருசாமி போய்ட்டாருங்க என்ற வார்த்தை வளர்ந்து ஒடிந்து கிடந்த தென்னை மரங்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. பிள்ளை மாதிரி வளர்ந்த மரங்கள்ங்க . இப்படி ஒடிஞ்சு விழுந்து ஒண்ணுமில்லாம போனா எந்த மனுசனுக்கு தான் ஏக்கம் இருக்காது. அதான் பட்டுன்னு போய்ட்டாரு போல ”

“எவன் கிட்டயும் கையேந்தாத மனுசங்க . தன் மானத்தோட வாழத் துணை குடுத்த தென்னை மரங்க இப்படி விழுந்தா எவனால தாங்க முடியும். அதான் போயிட்டாரு போல என்றவரின் பேச்சு குருசாமியின் குடும்பத்தை என்னவோ செய்தது.

அப்போது ….”சர்ரென வீசியது – ஒரு மெல்லிய காற்று,

… “ம்ம்ம்ம்” என்ற பெருமூச்சு விட்டு எழுந்த குருசாமியின் பெருமூச்சு, அந்த இடத்தையே நிலை குலையச் செய்தது.

“குருசாமி பொழச்சுக்கிட்டாரு, குருசாமி பொழச்சுகிட்டாரு” என்ற குரலில் விழாமல் நின்ற மரங்கள் சட்டென தலைவிரித்து நிமிர்ந்து ஆடியது போலிருந்தது.

எழுந்து நிமிர்ந்தவர் சுற்றிப்பார்த்தார். வளர்ந்து வாழ வைத்த தென்னை மரங்கள் வீழ்ந்து கிடந்ததை நினைத்து வேதனைப் பட்டார் மீண்டும் விம்மி விம்மி அழுதார்.

குருசாமி பிழைத்ததை நினைத்து குடும்பமே கொண்டாட்டத்தில் குதித்தது “எல்லாம் போச்சே” என்று வெறுத்துப் போய் விரக்தியில் வெறித்துப் பார்த்தார் குருசாமி.

எழுந்து வேகமாக நடந்தார்.

போன வேகத்தில் அவருக்கு புதிய நம்பிக்கை ஒளி பிறந்தது.

மரங்கள் விழுந்து கிடந்த ஓர் மூலையில் சாய்ந்து கிடந்த ஒரு தென்னம் பிள்ளையைத் தூக்கி நிறுத்தினார் .

அதற்கு மட்டும் போன உயிர் திரும்பி வரவில்லை ; எல்லோருக்கும்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *