ஸ்டாக்ஹோம், அக்.11-
தென்கொரியா பெண் எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 7–ந்தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைகளுக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
தென்கொரியா நாட்டை சேர்ந்த பெண் எழுத்தாளரான ஹான் காங்குக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.
கவித்துவமான மொழி மற்றும் தீவிர உரைநடையில் வரலாற்று துயரையும், மனித வாழ்க்கையின் பலவீனங்களையும் வெளிப்படுத்தும் அவரது எழுத்துக்காக அவருக்கு இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசு கமிட்டி அறிவித்துள்ளது.
1970-ம் ஆண்டு பிறந்த ஹான் காங் இளவயது முதலே இலக்கியம் மற்றும் இசையில் ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். 1993-ம் ஆண்டு முதல் கவிதைகள் எழுத ஆரம்பித்த ஹான் காங், சிறுகதைகள், நாவல்கள் என எண்ணற்ற படைப்புகளை வழங்கியுள்ளார்.
‘தி வெஜிடேரியன்’ என்கிற இவரது நாவல் 2016-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றது. இதனை, தமிழில் எழுத்தாளர் சமயவேல், ‘மரக்கறி’ என்கிற பெயரில் மொழியாக்கம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹான் காங் இலக்கிய நோபல் பரிசை வென்ற முதல் ஆசிய பெண் மற்றும் முதல் தென்கொரிய எழுத்தாளர் ஆவார். மேலும் இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெறும் 18-வது பெண், ஹான் காங் என்பது குறிப்பிடத்தக்கது.