சிறுகதை

தூர இருப்பதே நலம் (ராஜா செல்லமுத்து)

நெருங்கியிருப்பதைவிட தூர இருப்பதே சாலச்சிறந்தது…
சுப்பிரமணியின் கண்களுக்கு மாதவன் சாமி ஓர் கடவுளாகவே காட்சியளித்தான். அவனுடைய ஊனும் உயிரும் மாதவனையே மண்டியிட்டுக் கிடந்தது. அவனுடைய சுப்ரபாதம் பாடாத நாளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவனைப் பற்றி அங்குலம் அங்குலமாகப் பேசிக்கொண்டிருந்தான் சுப்பிரமணி. ஒரு அளவுக்கு மேல் கேட்பவர்களுக்கு இவனென்ன இப்படி ஜால்ரா தட்டுறானே என்று சொல்லும் அளவிற்கு மாதவனைப் பற்றி பேச்சுகள் சுப்பிரமணியத்திடம் மண்டிக்கிடந்தன.
சம்பத்….. சம்பத்… என்ற சுப்பிரமணியத்தின் பேச்சுக்குச் செவி கொடுத்தான் சம்பத். ம்ம் என்ற அதிகாரப் பதிலே அவனுடைய பேச்சுக்கு மரியாதை அவ்வளவு தான் எனப்பட்டது.
சம்பத் நம்ம மாதவன் சாமி எப்படி? என்று கேட்கும் போதே அவனின் ஆர்வம் மேலோங்கி நின்றதை சம்பத் பார்க்காமல் இல்லை.
எப்படின்னா?
அவரப்பாத்தாலே எனக்கு என்னமோ மாதிரி இருக்கு. என்னவொரு ஞானம். எப்பிடியொரு அறிவு அப்பிடியே அவ்வளவையும் அக்கு வேறு ஆணிவேறா புட்டு புட்டு வச்சுப் பேசுற பேச்சு இருக்கே அவருக்கு நிகர் அவரே தான்.
அவர் மாதிரி ஆளுங்க இந்த பூமியில் மனுசன் உருவத்தில இருக்கிற கடவுள் என்று அள்ளி விட்டுக்கொண்டிருந்தான்.
இதைக் கேட்ட சம்பத்தின் காதுகள் காயம்படாமலே ரத்தம் சிந்தின அன்னைக்கு ஒரு நாள் மகாபாரதத்த பத்தி பேசுன பேச்சு இருக்கே அது கடவுள் தமிழ்ல பேசுன பேச்சு மாதிரியே இருந்தது சம்பத்.
ம் என்ற பதில் சுப்பிரமணிக்கு போதுமானதாக இல்லாமல் இருந்ததால் என்ன எல்லாத்துக்கும் ம் மட்டும் தான் பதிலா? பெறகு என்னைய என்ன சொல்லச் சொல்ற?
மாதவன சாமியப் பத்தி இவ்வளவு பெருமையா பேசிட்டு இருக்கேன் அதுக்கு நீ சரியா பதில் சொல்ல மாட்டீங்கிறயே?
நான் சொன்னா நீ கேக்கப்போறியா என்ன? பட்டா நீயே தெரிஞ்சுக்கிருவ
அப்படின்னா அவரு தப்பான ஆளுன்னு சொல்றியா? நான் அப்பிடிச் சொல்லலையே
பெறகு?
நான் நெருங்கிப் பழகியிருக்கேன். அவருகிட்ட இருந்து நான் கத்துக் கிட்டத அவருகிட்ட இருந்து தெரிஞ்சுக் கிட்டத சொல்றேன்.
அவரு சொல்லும் செயலுக்கும் பொருத்தமில்லாத ஆளு.
சொல்றத கண்டிப்பா செய்ய மாட்டாரு. படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோயில்ன்ற மாதிரியிருக்கும் அவரோட நடவடிக்கை . அவர் பசுத் தோல் போர்த்தின புலி அவரோட எளிமைக்குள்ள நாத்தம் அடிக்கிற சாக்கடை ஓடிட்டு இருக்கு . அவர நீ நம்பாதே என சம்பத் எச்சரிக்கை வார்த்தைகளை உச்சரித்தும் அது சுப்பிரமணியின் செவிகளில் போய்ச் சேரவே இல்லை.
இல்ல நீ தப்பா சொல்ற மாதவன் .சாமி ஒரு கண்ணாடி மாதிரி. நீங்க எதைக் காட்டுறீங்களோ அப்படியே அது பிரதிபலிக்கும் என்று சுப்பிரமணி சொன்ன போது கடகடவெனச் சிரித்தான் சம்பத் .
நான் சொல்றத எதுவும் நீ கேக்கப் போறதில்ல. பட்டுப் பாரு அப்புறம் தெரியும் அவரோட அர்த்தம் என்ற சம்பத் சுப்பிரமணியத்தை விட்டு விலகியே நின்றான். அவன் சொல்லும் வார்த்தைகள் ஒன்றைக் கூட அவன் செவிகளில் சேர்க்காமல் ஒரு நாள் மாதவனைப் பார்ப்பதற்கு அவரின் ஆன்மீக அலுவலகம் சென்றான். அறைக்கு வெளியே ஊதுபத்தியின் வாசனை பரவிப்பரவி அந்தப் பகுதியையே சுகந்தமாகவே வைத்திருந்தது. நாசியில் வாங்கிய நறுமணத்தை உயிருக்குள் ஊற்றி வைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் சுப்பிரமணி அவரின் சாந்த முகம் பார்த்து சாஷ்டாங்கமாக கீழே விழுந்தான்.
ஐயா நீங்க என்னோட கடவுள். நீங்க இந்த பிரபஞ்சத்தின் பிதா ;ஒங்களோட வார்த்தைகள கேட்டு கேட்டு வளந்தவன் நான்; நீங்க இல்லாம நான் இல்ல என்று உயிர் உருகிப் பேசினான்.
குழந்தாய் ….. இது இறைவனின் சித்தம். அவன் இட்ட கட்டளையை அடியேன் நிறைவேற்றுவது தான் என் பொறுப்பு. மற்றபடி உலகம் ரொம்பக் கொடியது நீ தான் புரிந்து கொண்டு வாழ வேண்டுமென அறிவுரை அறிக்கையை ஆன்மீக உரையாய்ச் சொன்னான் மாதவன் . அவனின் வார்த்தைகளின்படி உள்வாங்கிய சுப்பிரமணி அதை உயிருக்குள் ஊற்றிக் கொண்டான். நாட்கள் நகர்ந்தன மாதங்கள் கடந்தன தன் தெய்வமே மாதவன் தான் என்று மண்டியிட்டுக் கிடந்த சுப்பிரமணியத்திற்கு ஒரு நாள் சுரீரென்றது. சாமி இந்த ஆன்மீகப் பயணம் எவ்வளவு தூரம்? போகிறவரைக்கும் ஆன்மீகச் சுற்றுலா போறதா சொன்னீங்களே?
போகலாம் என்ற இழுத்தடிப்புப் பேச்சு சுப்பிரமணியை என்னவோ செய்தது.
சாமி ஆன்மிகச் சுற்றுலாவிற்கு மக்கள்கிட்டயிருந்து பணம் வசூல் பண்ணணுனீங்களே என்னாச்சு?
இருக்க
என்னது இருக்கா?
ஆமா
சாமி நீங்க பண்றது தப்பு
எது தப்பு
நீங்க சொல்ற எதுவுமே செய்றதில்ல. பேசுறது ஒண்ணா இருக்கு; செய்றது ஒண்ணா இருக்கு. ரெண்டுக்கும் இடை வெளி நிறையை இருக்கு. நீங்க சரியில்ல சாமி
ஓ அப்படியா?
ஆமா நான் உங்கள கடவுளுக்கு நிகரா நெனைச்சேனே .
நானா உன்னைய அப்படி நினைக்கச் சொன்னேன். என்னைய அப்படி நினைச்சுட்டு இருந்தது உன்னோட தப்பு.
இது என்னோட வாழ்க்கைக்கு வழி. ஆன்மிகம்ங்கிறது என்னோட அடித்தளம்: அவ்வளவு தான். புரிஞ்சுக்கிட்டவன் – கூட வாரான்.
உன்னைய மாதிரி பேசுறவன் விலகிப் போறான். நீயும் அப்படித்தான் பேசுற என்ற மாதவன் சுப்பிரமணியத்தை சுடு சொற்களால் சுட்டு வெளியே தள்ளினான்.
சூடு பட்டு வீடு வந்தவன் திரும்பவும் சம்பத்திடமே போய் விழுந்தான்.
என்ன நான் சொன்ன ஒண்ணக்கூட நீ கேக்கலையே .இங்க எல்லாமே இப்பிடித்தான். பொய் புரட்டு பித்தலாட்டம் ஏமாற்று வேலை புறம் பேசுறது பொறாமை சுயநலம் இப்படி எல்லாம் அசிங்கங்களும் எல்லார்கிட்டயும் ஒட்டிட்டு தான் இருக்கு. இது மாதவன் சாமி கிட்ட கொஞ்சம் அதிகம் சகிச்சுப் போனா சாதகமா இருக்கும். இப்படி இருக்கிறவன் நிறையப் பேரு அவரு கூடவே இருக்கானுக. உன்னை மாதிரி சுயமரியாதையோட பேசுனா இப்பிடித்தான்.
துப்பி விட்டுருவானுக என்று சம்பத் சொல்லும் போது
ஆமால்ல மாதவன் சாமிய தூரமா இருந்தே ரசிச்சிருக்கலாம் போல. கிட்டப் போய் பாத்தா தான் தெரியுது .இவரு ஈரத்துணிய வச்சு கழுத்தறுக்கிற ஆளுன்னு என்று சம்பத்திடம் பேசினான் சுப்பிரமணி .
அதிலிருந்து அவன் பெரிய மனிதன்; அறிவாளி ;புகழ் பெற்றவன் என்று சொல்லிக் கொள்பவன் எவனிடமும் அருகே செல்வதே இல்லை தூர இருப்பதே நலமென்று விலகி நின்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *