சிறுகதை

தூரம் | ராஜா செல்லமுத்து

Spread the love

தான் யாரென்றே தெரியாத கோமா நிலையில் கிடந்த ராஜசேகரைப் பார்க்க கூட்டம் கூட்டமாக வந்தனர் உறவினர்கள்.

அகலமான கண்களைச் சுருக்கிக்கொண்டு விழித்தது விழித்தபடியே கிடந்தவரைப் பார்த்தவர்கள் பாவப்படாமல் இல்லை.

‘‘எப்ப இப்பிடி நடந்துச்சு..

‘‘ராத்திரியாம்..

‘‘நேத்து ராத்திரியா..?

‘‘ஆமாங்க..

‘‘வீட்டுல யாருமே இல்லையா..?

‘‘எல்லாரும் இருந்திருக்காங்க ..

‘‘பெறகு எப்பிடி..?

‘‘தெரியலையே?

‘‘இல்ல.. இந்த மாதிரி கண்டிசன் உள்ள ஆளுகளுக்கு ரெண்டு மூனு மணிநேரத்துக்கு முன்னாடியே சிம்டம்ஸ் தெரியுமாமே..! அதக்கூடவா.. வீட்டுல இருக்கிறவங்க கவனிக்கல..’’ என்று ஒருவர் கோபமாகக் கேட்க

‘‘என்னமோங்க.. எனக்கு தெரியல..’’

‘‘ம் ம் நல்ல குடும்பம்யா இது..ஒரு மனுசன் கஷ்டப்படுறது கூட தெரியாம எப்பிடி தூங்கிட்டு இருந்திருக்காங்கன்னு பாருங்க..’’ என்று சொல்லிப்போனவரை ஒருவர் ஒரு மாதிரியாகப் பார்த்தார்.

‘‘என்னங்க அப்பிடி பாத்திட்டு இருக்கீங்க..? என்று அவர் திருப்பி எகிற

‘‘ராஜரேகர் வீட்டுக்காரங்க சொல்றத கேட்டா.. நீங்க ரொம்ப தெகச்சுப்போவீங்க..’’ என்று சொன்னவரை

‘‘யார்.. அவங்க..’’ என்று கேட்டபோது

‘‘அதா.. நிக்கிறாங்க.. பாருங்க அவங்க தான் ..’’என்று கைகாட்ட பிழியப்பிழிய அழுதகொண்டிருந்தவளிடம் வந்தான்.

‘‘இப்ப எப்பிடி கேக்குறது..? வேணாமே நாளைக்கு கேக்கலாமா..? என்று அந்த நாளைக் கடத்தினான் .

‘‘சரி இன்னைக்கு வேணாம்..’’ என்று முடிவெடுத்தவன் மறுநாள் கோமாவில் கிடந்தவரைப் பார்க்க அதே மருத்துவனைக்குச் சென்றான் சங்கர்.

‘‘வாங்க.. சங்கர் எப்ப வந்தீங்க..? உபசரித்து வரவேற்றார் கோமாவில் விழுந்து கிடந்தவரின் உறவினர் ஒருவர்.

ராமு மாமா நேத்து கோமாவுல விழுந்த செய்தி கேட்டே நான் ஓடிவந்திட்டேன் என்றவரைப் பார்த்தவர்

‘‘அப்பிடியா..? என்று ஆச்சர்யமாக கேட்டார்.

‘ஆமா..

‘‘ஒன்னு கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க.. ராமு மாமாவுக்கு பொண்டாட்டி புள்ளையெல்லாம் இருக்காங்களா..? ’’என்ற சங்கரிடம்

‘‘ஏன் அப்பிடி கேக்குற ?’’ என்றார் உடனிருந்த உறவினர்

‘‘இல்ல…. நோய் ராத்திரி தானே வந்திருக்கு. அப்பிடியிப்பிடி இருக்கும் போது வந்திருந்தா கூட படத்திருக்கிற பொண்டாட்டிக்கு தெரியாமல போயிரும் ..’’ என்று பொசுக்கென சங்கர் கேட்க அதற்கு எதுவும் பேசாமல் இருந்தார் உறவுக்காரர்.

‘‘என்ன எதுவும் பேசமாட்டீங்கிறீங்க..? என்று சங்கர் கேட்டான்.

‘‘இதெல்லாம் அவங்கிட்ட போயி நான் கேக்க முடியுமா..? நீயே கேளு..’’ என்று ராமுவின் மனைவியிடம் சங்கரை நகர்த்தி விட அப்பவும் அழுது கொண்டிருந்த ராமுவின் மனைவி சரஸ்வதியை ஒரு மாதிரியாகப் பார்த்தான்.

என்ன என்பது போலவே சரஸ்வதி சங்கரைப் பார்க்க

‘‘எனக்கு ஒரு சந்தேகம்..’’ என்றான் சங்கர்.

‘‘சொல்லுங்க..’’ என்று அழுகை கலந்த குரலில் கேட்டாள் சரஸ்வதி.

‘‘இல்ல ராமு மாமாவுக்கு ராத்திரி தானே இப்பிடி ஆச்சு..

‘‘ஆமா..’’ என்று வேகமாகத் தலையாட்டினாள் சரஸ்வதி.

‘‘பெறகு எப்பிடி..? உங்களுக்கு அது தெரியாம ? என்றவனிடம்

‘‘தம்பி அத ஏன் கேக்குறீங்க.. பத்து பதினஞ்சு வருசமா.. நானும் அவரும் தனித்தனிதான்..’’

‘‘அப்பிடியா..?

‘‘ஆமா தம்பி ராத்திரியில.. நான் எம் புள்ளைகளோட தான் படுப்பேன் ..அவரு மட்டும் தனியா தான் படுப்பாரு..

‘ம்.. ஒங்களுக்கு எத்தன வயசு..? என்ற சங்கரிடம்

‘‘ஏப்பா.. இந்த நிலைமையில இப்பிடியொரு கேள்வி..

‘‘சும்மா.. சொல்லுங்க..’’ என்ற சங்கரிடம்

‘‘நாப்பத்தி எட்டு’’என்றார்.

‘‘ம்.. ஒங்க வீட்டுக்காரருக்கு’’

‘‘அவருக்கு அம்பது அம்பத்தஞ்சு வயசிருக்கும்..’’

‘ம்.. இவ்வளவு சின்ன வயசிலயே இப்பிடி தூரம் தூரமா.. படுக்க போயிதான் ஒங்க வீட்டுக்காரருக்கு இப்பிடியொரு நோய் வந்திருச்சு அப்பிடியில்லாம ஒங்க கூட அவரு படுத்திருந்தாருன்னா.. ஒடனே அவர காப்பாத்தியிருக்கலாம். இப்ப பாருங்க.. கோமா அது என்னைக்கு முடியுதோ.. அன்னைக்கு தான் இவரு முழிக்கப்போறாரு.. அதுவரைக்கும் அப்படியே.. தான் கெடக்கப்போறாரு இல்லலையா..? புருசன் பொண்டாட்டி பக்கத்தில் படுத்திட்டு இருக்கிறது வெறும் தாம்பத்யத்துக்கு மட்டுமில்லீங்க .. ஒரு பாதுகாப்புக்கும் தான..’’ என்று சங்கர் சொன்ன போது சுரீரென்று உறைத்தது சரஸ்வதிக்கு

‘‘ நெஜம் நான் சொல்றது . ஒங்க கூட ஒங்க வீட்டுக்காரரு படுத்திருந்தாருன்னா.. இந்நேரம் அவரு சராசரி மனுசன் மாதிரியே இருந்திருப்பாரு ..இந்த தப்புக்கு காரணம் அவரு இல்லீங்க.. நீங்க தான்..’’ என்று சங்கர் சொல்ல

தன் தவற்றை உணர்ந்த சரஸ்வதி ராமுவின் அருகே போய்ப்படுத்தாள்.

அது வரையில் அசையாமலிருந்த ராமுவின் கண்கள் அப்போது மெல்ல அசைந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *