சிறுகதை

தூய உள்ளம் -ராஜா செல்லமுத்து

அன்பின் திருவுருவம் தூய உள்ளம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் தினந்தோறும் வாசகங்கள் படிப்பதும் யாசகங்கள் கொடுப்பதும் மனிதர்களை நேசிப்பதும் பற்றிப் பக்கம் பக்கமாக பேசிக்கொள்வார்கள்.

உயிர்கள் இந்த பூமிக்கு வந்திருப்பது நம்மைப் போன்ற மனிதர்களைப் பாதுகாக்கவும் நேசிக்கவும் தான் என்று அவர்கள் முழங்கும் பேச்சைக் கேட்டால் இந்த பூமியில் அவர்கள் தான் அத்தனை உயிர்களையும் காப்பாற்றுகிறவர்கள் என்ற உணர்வு நமக்கு ஏற்படும்.

அந்த அளவிற்கு உயிர்களை நேசிக்கும் உத்தமர்கள் போல தினமும் மேடையிட்டு பேசிக் கொண்டிருப்பார்கள். மனித உயிர்கள் மட்டுமல்ல, இந்த பூமியில் பிறந்தது எல்லா உயிர்களும் நமக்கு கடவுள் கொடுத்த கொடை என்று அவர் பேசும்போது அத்தனை பேரும் அதை ஆமோதித்தார்கள்.

” நீங்கள் சொல்வது சரி. மற்ற உயிர்களுக்கும் நாம் சேவை செய்ய வேண்டும் . அதன் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். அதுதான் நமக்கு கடவுள் இட்ட கட்டளை” என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். பரபரவென்று வாசகங்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். பாடல்கள் பாடி ஆடிக் கொண்டிருப்பார்கள் அன்பையும் பண்பையும் உயிர்களையும் நேசிப்பதாக உறுதி எடுத்துக் கொள்வார்கள்.

இப்படி அவர்கள் தினந்தோறும் நடத்தும் நாடக மேடையில் இன்று அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டு நான்கு ஐந்து நாய்கள் தூங்கிக் கொண்டிருந்தன. அருகில் அமர்ந்திருந்த பக்தர்கள் இதை சற்றும் யோசிக்காமல் அமர்ந்திருந்தார்கள். மேடையில் பேசிக்கொண்டிருந்த அந்த மனிதர் மட்டும் கீழே இறங்கி வந்தார்.

“எல்லா உயிர்களும் நம்மைப் போன்றவை தான் .அந்த உயிர்களுக்கும் நமக்கும் ஒரு பந்தம் இருக்கிறது. அந்த உயிர்களை நாம் காப்பது நம் கடமை ” என்று சொல்லிக் கொண்டே அருகில் இருந்த தண்ணீர் கேனின் மூடியில் தண்ணீரை எடுத்து படுத்துக் கிடந்த அந்த நாய்கள் மீது தண்ணீரைத் தெளித்தார். லொள் என்று குரைத்துக் கொண்டு அந்த வழியாக ஓடியன அத்தனை நாய்களும்.

நாய்கள் மிரண்டு ஓடியதைப் பார்த்த மனிதர்கள் மறுபடியும் பிரசங்கம் கேட்க ஆரம்பித்தார்கள்.

அந்த தலைமைப் பேச்சாளர் மறுபடியும் தன் பிரசங்கத்தை ஆரம்பித்தார்

” புல் பூண்டு முதல் மனித உயிர்கள் வரை அத்தனையும் நாம் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. எந்த உயிருக்கும் நாம் ஒரு தீங்கும் விளைவிக்க கூடாது. அவைகள் எல்லாம் நம்மைச் சார்ந்தது தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவைகளுக்கு தீங்கு விளைவித்தாலோ அல்லது துரோகம் விளைவித்தாலோ நாமெல்லாம் உயிரினங்களுக்கு துரோகம் செய்கிறோம் என்று அர்த்தம் ” என்று மேடையில் முழங்கிக் கொண்டிருந்தார்,அந்தத் தலைமை பேச்சாளர்

சிவனே என்று படுத்திருந்த நான்கு நாய்கள், அந்தத் தலைமை பேச்சாளர் தண்ணீர் தெளித்து துரத்தி விட்டதால் தூக்கத்தைத் தொலைத்து தூரமாய் நின்று உயிர்களைப் பற்றி உயர்வாகப் பேசிக் கொண்டிருக்கும் அந்த தலைமைப் பேச்சாளரை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தன.

மறுபடியும் அவர் உயிர்கள் பற்றி பேச அந்த நாய்களுக்குப் புரிந்ததோ என்னவோ தெரியவில்லை .கூட்டத்தையும் அவரையும் பார்த்து லொள் லொள் என்று குரைக்க ஆரம்பித்தன.

தலைமை பேச்சாளரின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் நாய்கள் குரைப்பதை பார்க்கத் தொடங்கினார்கள். தலைமை பேச்சாளர் பேச்சை தொடர்ந்துகொண்டிருந்தார்.

நாய்களும் தங்கள் குரைப்பைக் குறைக்காமல் குரைத்துக் கொண்டே இருந்தன.

#சிறுகதை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *