Uncategorized

தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டம்

Makkal Kural Official

100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள்: ஸ்டாலின் வழங்கினார்

மருத்துவ காப்பீட்டு அட்டைகள், நரிக்குறவர்களுக்கு வீடுகள் கட்ட ஆணைகளையும் வழங்கினார்

சென்னை, டிச 6–

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற விழாவில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னதத் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு 213 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் வழங்கிடும் முதற்கட்டமாக 100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களை வழங்கினார்.

மேலும், அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 128 பயனாளிகளுக்கு கடனுதவிக்கான ஆணைகளையும், 100 தூய்மைப் பணியாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகளையும், 30 நரிக்குறவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளையும் வழங்கினார்.

கடந்த ஆண்டுகளில், மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவல நிலையினை மாற்றி சென்னை பெருநகரில் உள்ள கழிவுநீர் அகற்றும் கட்டமைப்புகளின் இயக்குதல் மற்றும் பராமரித்தல் பணிகளை சென்னை குடிநீர் வாரியம் தொடர்ந்து இயந்திரமயமாக்கியுள்ளது. இதனடிப்படையில், கழிவுநீர் கட்டமைப்பின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 539 இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளது. மேலும், புதியதாக 58 கழிவுநீர் பராமரிப்பு இயந்திரங்களை 28 கோடியே 55 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முதலமைச்சரால் 12.08.2024 அன்று சென்னை குடிநீர் வாரியத்திற்கு வழங்கப்பட்டது.

இவ்வியந்திரங்களை இயக்குவதற்கும், கழிவுநீர் கட்டமைப்புகளை பராமரிப்பதற்கும் 728 நிரந்தர மற்றும் 1489 ஒப்பந்த பணியாளர்கள் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை குடிநீர் வாரியம், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களான 39 நபர்கள், 48 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் 126 வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஆதிதிராவிடர் –பழங்குடியினருக்கு முன்னுரிமை கொடுத்து, மொத்தம் 213 நபர்களுக்கு நவீன யந்திரங்கள் வழங்கி இவர்களை தொழில் முனைவோர்களாக மேம்படுத்த 27.12.2023 அன்று பணி ஆணைகள் வழங்கப்பட்டது.

இவ்வகையான நவீன கழிவுநீரகற்று இயந்திரங்கள் பெறுவதற்காக அம்பேத்கர் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் சிறப்பு நிகழ்வாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 50 விழுக்காடு மானியம் வழங்கி, மொத்தம் 213 நபர்களுக்கு கடன் உதவி மற்றும் மானியம், முதலமைச்சரால் 8.3.2024 அன்று வழங்கப்பட்டது.

சென்னை குடிநீர் வாரியத்தில் இத்திட்டத்தின் வாயிலாக பணியாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்ச வருமானமாக தலா 50 ஆயிரம் ரூபாய் என 7 ஆண்டுகளுக்கு உறுதிசெய்யப்படும். இப்பணிகளுக்காக 500 கோடியே 24 லட்சம் ரூபாய் நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் இந்த குடும்பத்தினருக்கு நிரந்தர வருமானம் உறுதி செய்யப்பட்டு அவர்களுடைய வாழ்வாதாரத்தையும், சமுதாய கௌரவத்தையும் மேம்படுத்த இந்த சிறப்பு திட்டம் வழிவகுத்துள்ளது.

இப்பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்களுக்கு புதிய தொழில்நுட்ப இயந்திரங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் முறையான பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை குடிநீர் வாரியத்தில் பணிபுரியும் அனைத்து தூய்மைப் பணியாளர்களையும் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கடன் திட்டம் போன்றவை தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பதினருக்கு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, இன்றையதினம் முதலமைச்சர் தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னதத் திட்டத்தின் கீழ், தூய்மைப் பணியாளர்களுக்கு 213 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களை வழங்கிடும் முதற்கட்டமாக 100 தூய்மைப் பணியாளர்களுக்கு நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களுக்கான சாவிகளை வழங்கி, அவ்வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

35% மான்யம்

65% வங்கிக் கடன்

சமூக நீதி மற்றும் சமத்துவ வளர்ச்சிக்கான முன்முயற்சிகளை செயல்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாடு, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்” 2023-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களை தொழில் முனைவோராக்கும் ஓர் உன்னதமான திட்டமாகும். இத்திட்டத்திற்கான தொழில் முதலீட்டில் 35 சதவீதத் தொகையை மானியமாகவும் 65 சதவீதத் தொகைக்குரிய வங்கிக் கடன் வட்டியில் 6 சதவீதத் தொகையை வட்டி மானியமாகவும் அளிக்கிறது.

அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், இன்றையதினம் முதலமைச்சர் 128 பயனாளிகளுக்கு கடனுதவிக்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.

மருத்துவக் காப்பீட்டு

அட்டைகள்

தூய்மைப் பணியாளர்கள் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெறும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் 100 தூய்மைப் பணியாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகளை வழங்கிடும் அடையாளமாக 5 தூய்மைப் பணியாளர்களுக்கு முதலமைச்சர் காப்பீட்டு அட்டைகளை வழங்கினார்.

நரிக்குறவர்களுக்கு

வீடு கட்டுவதற்கான ஆணை

திருவான்மியூரில் தற்காலிக வீட்டில் வசித்து வரும் தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களாக உள்ள நரிக்குறவர்கள் 30 நபர்களுக்கு முழு மானியத்துடன் வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் 5 நரிக்குறவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ். ரகுபதி, மா. சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, டாக்டர்.மா.மதிவேந்தன், மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் கு. செல்வப்பெருந்தகை, இ.பரந்தாமன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர் மு.மகேஷ் குமார், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் அரசு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *