தூத்துக்குடி, ஆக. 23–
தூத்துக்குடி வாழைத்தோட்டத்தில் இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சிறீவைகுண்டத்தை அடுத்த செய்துங்கநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கருங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
இந்நிலையில் திருநெல்வேலி-திருச்செந்தூர் மெயின் ரோட்டிலுள்ள கருங்குளம் ஊரிலுள்ள விவசாய தோட்டம் ஒன்றில் இன்று காலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் உடனடியாக செய்துங்கநல்லூர் காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
10,000 மரங்கள் சேதம்
சம்பவ இடத்திற்கு சில நொடிகளில் காவல் துறையினர் வந்த நிலையில், தீயணைப்புத் துறையினர் சாத்தான்குளம் பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை அணைத்துவிட்டு வர வேண்டி இருந்தது. இதனால் பொதுமக்கள் உதவியுடன் காவல் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் உருவானது. இந்த தீ விபத்தில் சுமார் 10,000 வழை மரங்கள் எரிந்திருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பத்திற்கும் மேற்பட்ட வெவ்வேறு இடங்களில் வாழைத்தோட்டம், பனை மரங்கள் தீயில் எரிந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.