திருப்பலியுடன் தங்கத்தேர் பவனி தொடங்கியது
தூத்துக்குடி, ஆக. 5–
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய தங்கத் தேர் பவனி சிறப்பு திருப்பலியுடன் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி உலகப் புகழ் பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 441 ஆவது ஆண்டு திருவிழா, 16 ஆவது தங்கத் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த ஜூலை மாதம் 26 ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து நாள்தோறும் இந்தியா முழுவதும் உள்ள ஆயர்கள் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர். இத்திருவிழாவின் சிகர நிகழ்வான தங்கத் தேர்த்திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
தங்கத்தேர் பவனி
தொடக்க நிகழ்வாக, காலையில் பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையில் முதல் திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தங்கத் தேர் சிறப்பு திருப்பலியை, கோவா மறைமாவட்ட பேராயர் கர்தினால் பிலிப் நேரி தலைமை வகித்து நடத்தினார்.
தொடர்ந்து அன்னையின் தங்கத்தேர் பவனியை ஆயர்கள் தாமஸ் அக்குவினாஸ், இம்மானுவேல் ஃபர்னான்டோ ஆகியோர் அர்சித்து தொடங்கி வைத்தனர். தங்கத் தேர் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியுள்ளதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.