2வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
தூத்துக்குடி, செப். 14–
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தூத்துக்குடி துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
வடகிழக்கு வங்கக் கடல் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, தொடர்ந்து மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, படுகாலி அருகே வங்கதேச கடற்கரையை கடக்கக் கூடும் எனவும் இதனால் தமிழகக் கடலோர மாவட்டங்களில் மழையுடன், பலத்த கடற்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறையின் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக மீனவர்கள், கப்பல்களுக்கு தெரிவிக்கும் வகையில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது. மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2 ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை
சூறாவளிக் காற்று மற்றும் ஓணம் பண்டிகை காரணமாக தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இரண்டாவது நாளாக சனிக்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.
மேலும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்துக்கு கேரளத்தில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து மீன்களை வாங்கிச் செல்வர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அம்மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்துக்கு கேரள மீன் வியாபாரிகள் வருகை குறைந்து உள்ளதாகவும், இதனால் மீன்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
தூத்துக்குடி துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம். மேலும் வருகிற நாள்களில் வியாபாரிகள் வராதபட்சத்தில் மீனவர்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்படலாம் என்பதால் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் 2 ஆவது நாளாக சனிக்கிழமை கடலுக்குச் செல்லவில்லை. இதனால், மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீண்டும் திங்கள்கிழமை முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.