தூத்துக்குடி, அக். 18–
தூத்துக்குடி அருகே பெரியசாமிபுரம் கடலில் இன்று காலையில் குளித்துக் கொண்டிருந்த 5 பெண்களில், 2 பெண்கள் கடல் அலையில் சிக்கி பலியான நிலையில் 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மதுரை ஜி. ஆர். நகரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் அருகே பெரியசாமிபுரத்தில் உள்ள குலதெய்வ கோயிலில் சாமி கும்பிடுவதற்காக கடந்த 15 ந் தேதி சென்றுள்ளனர். இந்நிலையில், இன்று காலையில் வேம்பார் பெரியசாமிபுரம் கடலில் அவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, கடலில் காற்றின் வேகம் அலை அதிகமாக இருந்துள்ளது. கடலில் குளித்துக் கொண்டிருந்த மதுரை ஜி. ஆர் நகரை சேர்ந்த இலக்கியா (வயது 21), கன்னியம்மாள் (வயது 50), முருக லட்சுமி, (வயது 38), ஸ்வேதா (வயது 22), அனிதா (வயது 29) ஆகிய 5 பெண்கள் கடல் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
3 பேர் மீட்பு
அவர்களின் கூச்சல் சத்தத்தை கேட்டு அங்கிருந்த மீனவர்கள் கடலில் குதித்து 5 பேரையும் மீட்டதில் இலக்கியா, கன்னியம்மாள் ஆகிய இருவர் அலையில் சிக்கி மூச்சுத்திணறி பரிதாபமாக பலியாகினர். முருக லட்சுமி , ஸ்வேதா, அனிதா ஆகிய மூன்று பெண்கள் மீட்கப்பட்டு, வேம்பார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக வேம்பார் கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.