செய்திகள்

தூத்துக்குடியில் திருமணமான 3வது நாளில் காதல் தம்பதி படுகொலை

பெண்ணின் தந்தை கைது

தூத்துக்குடி, நவ. 3–

தூத்துக்குடியில் திருமணமாகி 3 நாட்களே ஆன காதல் ஜோடி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியில் வசிக்கும் வசந்தகுமார் மகன் மாரிசெல்வம் (23). இவர் ஷிப்பிங் கம்பெணி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவரும் தூத்துக்குடி திருவிக நகர் பகுதியை சார்ந்த கார்த்திகா (23) என்ற பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு கார்த்திகாவின் பெற்றோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், மாரிச்செல்வம் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர் என்பதால் இவர்களின் காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்த்து தெரிவித்து, காதலை விட்டுவிடுமாறு மிரட்டி வந்துள்ளனர். இதனால் ஒரே பகுதியில் வசித்து வந்த மாரிசெல்வம் குடும்பத்தினர் கார்த்திகா குடும்பத்தின் மிரட்டலின் பேரில் அந்த பகுதியில் இருந்து காலி செய்து முருகேசன் நகர் பகுதிக்கு கடந்த ஓராண்டுக்கு முன்னர் குடியேறி உள்ளனர்.

3 நாட்களுக்கு முன்

திருமணம்

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தேவர் ஜெயந்தி அன்று கார்த்திகா வீட்டை விட்டு ஒடி வந்து மாரிசெல்வத்தை கோவில்பட்டியில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் முடித்து மாரிசெல்வம் வீட்டில் அவரது தாய் தந்தையுடன் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இளம் தம்பதி இருவரும் வீட்டில் இருக்கும்போது திடீரென மூன்று மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த கும்பல் ஒன்று கடுமையான ஆயுதங்களை கொண்டு மாரிசெல்வம், கார்த்திகா ஆகிய இருவரையும் சராமரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.

தந்தை கைது

பெண்ணின் உறவினர்கள் இந்த கொலையில் ஈடுபட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தப்பிச் சென்ற குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் மணப்பெண்ணின் தந்தை முத்துராமலிங்கம் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரது உறவினர்கள் கருப்பசாமி, பரத் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடுதல் வேட்டை தொடர்கிறது. மேலும், சந்தேகத்தின் பேரில் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பதற்றமான சூழல் நிலவுவதால் அப்பகுதியில் காவல்துறையினர் பெருமளவு குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *