தூத்துக்குடி,ஏப்.4–
தூத்துக்குடியில் கொரோனா தொற்றால் இன்று காலை ஒருவர் உயிரிழந்துள்ளார். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நேற்று 186 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் 98 ஆண்கள் மற்றும் 88 பெண்கள் அடங்குவார்கள். அதிகபட்சமாக சென்னையில் 57 பேருக்கும், செங்கல்பட்டில் 22 பேருக்கும், கன்னியாகுமரியில் 15 பேருக்கும் மற்றும் வெளிநாட்டு பயணி ஒருவருக்கும் என மொத்தம் 30 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயத்தில் 8 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகாரித்து வருவதால், பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன் ( வயது 54) என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். பல்வேறு இணை நோய் பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த அவர், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 23–ந்தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தி்ல் கொரோனாவுக்கு உயிரிழப்பு ஏதுமில்லாமல் இருந்தது. இன்று கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.