வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு
புதுடெல்லி, மார்ச் 25–
தூதரகங்களை பாதுகாக்க வேண்டிய கடமையை இங்கிலாந்து முறையாக மேற்கொள்ளவில்லை என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் அருகே, கடந்த 19–ந்தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். காலிஸ்தான் ஆதரவு கொடியுடன் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கிற்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினர்.
அப்போது தூதரகத்தில் பறந்து கொண்டிருந்த இந்திய தேசிய கொடியை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அப்புறப்படுத்தினர். இது தொடர்பான ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக ஜெய்சங்கர் கூறியதாவது:
ஒரு நாட்டில் தூதர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்யவும், தூதரகம் மற்றும் தூதரக சொத்துக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது என்பது சம்பந்தப்பட்ட நாடுகளின் கடமை ஆகும். இந்த கடமை சரியாக நிறைவேற்றப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து இங்கிலாந்து அரசுடன் பேசி வருகிறோம்.
பாதுகாப்பு குறித்து பல நாடுகள் சாதாரணமாக எடுத்து கொள்கின்றன. தங்களது சொந்த பாதுகாப்புக்கு ஒரு கொள்கையும், மற்றவர்களின் பாதுகாப்புக்கு வேறொரு கொள்கையையும் கடைப்பிடிக்கின்றன. இதுபோன்ற வேறுபட்ட கொள்கைகளை வெளியுறவு அமைச்சர் என்ற முறையில் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.