அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
–
சென்னை, ஜன.7–
சிலர் தூண்டுதலின் பெயரால் செவிலியர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் சுமூக சூழலை ஏற்படுத்த அரசு முயன்று வருவதாகவும் அவர் கூறினார்.
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் பெருநகர சென்னை காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் சிற்பி திட்டத்தின் கீழ் 100 பள்ளிகளை சார்ந்த 5000 மாணவர்களுக்கு யோகா பயிற்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியதாவது:–
இந்தியாவில் உள்ள மாநகரங்களில் பெண்கள் வாழ பாதுகாப்பானது சென்னை என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மாநகர காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாநகரம் முழுவதும் சிசிடிவி கண்கானிப்பு, மக்கள் கூடும் இடங்களில் ட்ரோன் கண்கானிப்பு என இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது சென்னை மாநகரம். சிற்பி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு யோகா பயிற்சியை காவல்துறை தொடங்கியுள்ளது. மனதளவிலும், உடல் நலனிலும், தனிநபர் ஒழுக்கத்தை கற்பிக்கவும் இந்த பயிற்சி உதவும்.
சங்க நிர்வாகிகளுடன்
பேச்சுவார்த்தை
செவிலியர்கள் போராட்டத்தை பொறுத்தவரை செவிலியர்கள் சங்க நிர்வாகிகளை நேரில் அழைத்து இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.
அதற்கு முன்பாக ஒப்பந்த செவிலியர்களின் தனிப்பட்ட கோப்புகளை சரிபார்க்கும் பணி நடைபெறும்.
கொரோனா காலத்தில் பணியாற்றிய 2,300 ஒப்பந்த செவிலியர்களை அந்தந்த மாவட்டங்களில் பணியமர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு எந்த ஒரு பணி பாதிப்பும் ஏற்படாமல் அரசு பாதுகாக்கும்.
இதுவரை அவர்கள் 14 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊதியம் பெற்ற நிலையில் தற்போது 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. செவிலியர்களை சிலர் தூண்டி விட்டு இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. செவிலியர்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும். செவிலியர்கள் விவகாரத்தில் சுமூக சூழலை ஏற்படுத்த அரசு முயன்று வருகிறது என்றார்.