விரிந்து பரந்து கிடந்த அந்த ஆற்றங்கரை நீர்த்தேக்கத்தில் எத்தனையோ மனிதர்கள் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டு இருந்தார்கள். சிலருக்கு மீன்கள் கிடைத்தன. சிலருக்கு கிடைக்காமல் இருந்தன.
தூண்டிலைத் தலைக்கு மேலே தூக்கி லாவகமாக தண்ணீரில் போட்டு, கொக்கு உறுமீனுக்கு காத்திருப்பது போல தூண்டில் மீனுக்காக காத்துக் கிடந்தார்கள் மீன்பிடிப்பவர்கள். அங்கு பிரகாசம் வந்தார். அவர் வருவதை எதிர்பார்த்து காத்திருந்தது போலவே ஒருவன் அவரிடம் தூண்டிலைக் கொடுத்தான். தூண்டிலை வாங்கிய பிரகாசம் தலைக்கு மேலே லாவகமாகத் தூக்கி தண்ணீருக்குள் தூண்டிலை மூழ்க வைத்தார்.
சிறிது நேரத்திற்கெல்லாம் தூண்டிலில் குபுகுபுவென நீர்க்கொப்பளிக்க சட்டென்று துண்டிலைத் தூக்கினார். புழுவைத் தின்றபடியே ஒரு பெரிய மீன் சிக்கியிருந்தது. தூண்டிலில் சிக்கிய மீனை எடுத்து தன் அருகில் இருந்த நண்பரிடம் கொடுத்தார். அங்கிருந்தவர்களுக்கு எல்லாம் ஆச்சரியம்.
“என்ன இது? நாம தூண்டில் போட்டா மீன் கிடைக்க மாட்டேங்குது? இவர் போட்டா மட்டும் இவ்வளவு சீக்கிரம் மாட்டிக்கிதே? மீன் பிடிக்கிறதுக்கும் முகராசி வேணும் போல” என்று பேசிக் கொண்டார்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள். தேங்கியிருந்த அந்த நீர்க் குட்டையில் அலைகள் மெல்ல மெல்ல தண்ணீர் பரப்பில் நீந்தி தண்ணீரிலேயே அமிழ்ந்து கொண்டிருந்தன.
மீன்கள் ஏதும் வருகிறதா? என்று நாரைகள் தண்ணீரின் மேற்பரப்பில் இருந்து தன் கூரிய கண்களால் பார்த்துக் கொண்டிருந்தன. பிரகாசம் தூண்டில் போடுவதும் மீன்களைப் பிடிப்பதுமாய் இருந்தார். இதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சச்சின்.
பிரகாசம் மீன்பிடிப்பதற்கான காரணம் அவனுக்கு தெரியும் என்பதால் தனக்குள்ளே சிரித்துக் கொண்டான். ஒரு வழியாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக மீன்பிடித்தவர் சச்சினைப் பார்த்து ‘ போலாமா?” என்று கேட்டார்
” போகலாம்” என்று தலையாட்டினான் சச்சின். தான் பிடித்து வைத்திருந்த அத்தனை மீன்களையும் மீன்பிடித்துக் கொண்டு இருப்பவர்களிடம் பகிர்ந்து கொடுத்தார், பிரகாசம்.
இது அவர்களுக்கு எதிர்பார்த்ததுதான் என்றாலும் அவரின் செய்கை அவர்களுக்கு தினம்தோறும் என்னவோ தான் செய்தது.
“நமக்கு மீன் கிடைக்க மாட்டேங்குது? அவர் தூண்டில் போட்டா மட்டும் மீன்கள் கிடைக்கிறதே? மீன்களப் பிடிக்கிறது மட்டும் இல்லாம, அதையும் திரும்ப நம்மகிட்ட கொடுத்துட்டு போறாரே? இது எதுக்குன்னு தெரியல? இதுல ஏதோ ஒரு அர்த்தம் இருக்குமோ ?” என்று மீன்பிடிப்பவர்கள் பேசிக் கொண்டார்கள்.
அந்த இடத்தை விட்டு சச்சினுடன் நடையைக் கட்டினார், பிரகாசம். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர் “தம்பி நானும் ரெண்டு மூணு நாளா இங்கே வரேன். இவரு வராரு தூண்டில் போடுறாரு .மீன்கள் கிடைக்குது. ஆனா உங்களுக்கு மீன் கிடைக்க மாட்டேங்குது. அவர் பிடிச்ச மீன்கள வீட்டுக்கு கொண்டு போகாம உங்களுக்கெல்லாம் பகிர்ந்து கொடுத்துட்டு போறாரே? எதுக்கு இது?”
என்று அந்தப் பெரியவர் கேட்டபோது
” நீங்க சொல்றதிலேயே ஒரு பெரிய அர்த்தம் அடங்கி இருக்கு பெரியவரே. நாங்கெல்லாம் எங்களுக்காக சுயநலத்துக்காக மீன்பிடிக்கிறோம். ஆனா அவர் எங்களுக்கு கொடுப்பதற்காக மீன்பிடிக்கிறார். அதனால தான் அவருக்கு மீன் சிக்குது போல. நமக்குன்னு எதுவும் கேட்டு நின்னா, கடவுள் ஏதும் கொடுக்க மாட்டார் போல? வேற யாருக்காவது கேட்டா தான் எதுவும் கிடைக்கும்ங்கிறதுக்கு இது உதாரணம். இது மட்டும் தான், இந்தத் தத்துவம் மட்டும் தான் எனக்கு தெரியும். மத்தபடி அவர் எதுக்காக இங்க மீன் பிடிக்கிறாரு? அத ஏன் எங்களுக்கு கொடுக்கிறார்னு தெரியல. அத நீங்களே கேட்டு தெரிஞ்சுக்கோங்க”
என்று அந்த மீன் பிடிப்பவர்கள் சொல்ல, தூரம் நடந்து கொண்டிருந்த பிரகாசை அந்தப் பெரியவர் கூப்பிட்டார்
“தம்பி …. தம்பி…கொஞ்சம் நில்லுங்க” என்று அந்தப் பெரியவர் கத்திக் கூப்பிட, ஒரு முறை திரும்பிப் பார்க்காத பிரகாசம் யாரோ நம்மைத்தான் கூப்பிடுகிறார்கள் என்று திரும்பிப் பார்த்தார்
அந்தப் பெரியவர் வருவது நம்மிடம் தான் என்பதை உணர்ந்து கொண்ட பிரகாசும், சச்சினும் அதே இடத்தில் நின்றார்கள்.
” நான் ரெண்டு மூணு நாளா இங்க வந்து பார்த்துக்கிட்டு இருக்கேன். இங்க மீன்பிடிக்கிறீங்க. அதை எடுத்துட்டு வீட்டுக்கு கொண்டு போறது இல்ல. இங்கேயே கொடுத்துட்டு போறீங்களே ? இது எதுக்காகன்னு நான் தெரிஞ்சுக்கலாமா ? ” என்று அந்தப் பெரியவர் கேட்க
” ஐயா நான் மீன் பிடிக்கிறதே அந்த மீன்கள நான் வீட்டுக்கு கொண்டு போறதுக்காக இல்ல. எனக்கான மன அழுத்தம். அலுவலகத்தில இருக்கிற நிறைய வேலைப் பளு. அது மட்டும் இல்லாம குடும்பத்தில இருக்கிற பிரச்சனை. இந்த மீன் பிடிக்கும் போது எனக்கு ஒரு விதமான நிம்மதி கிடைக்குது. கவனம் முழுவதும் மீன்கள், அந்த குளம் மட்டுமே நினைவில் இருக்குது.
கொஞ்ச நேரமாவது என்ன மறந்து நாம் மீன் பிடிக்கும் போது, எனக்குள்ள இருக்குற ஸ்ட்ரஸ் அண்ட் டிப்ரஷன் குறையுத அதுக்காக தான் இங்க வந்து மீன் பிடிக்கிறேன். மத்தபடி ஒன்னும் இல்ல. நான் ஏன் மத்தவங்களுக்கு கொடுக்கிறேன்னா, இந்த மீன்கள வாங்குற அளவுக்கு கடவுள் எனக்கு சக்திய குடுத்திருக்கான். ஆனா, இங்க மீன் பிடிச்சிட்டு இருக்கிறவங்களுக்கு அப்படி இல்ல. ஏதோ ஒரு வகையில சம்பாதிக்கணும். இல்ல சாப்பாடுக்கு கொண்டு போகணும். அப்படிங்கிற இடத்துல இருக்காங்க. அதனால தான் நான் இந்த மீன்கள கொடுத்துட்டு போறேன்” என்று பிரகாசம் சொன்னபோது பெரியவருக்கு தூக்கி வாரி போட்டது.
” என்ன ஒரு பொதுநலங்க எல்லாமே தனக்குத்தான் அப்படின்னு நினைக்கிற இந்த உலகத்துல, இருக்கிறது அடிச்சு புடுங்கி தனக்கு தான் வேணும் அப்படின்னு நினைக்கிற இந்த பூமியில உங்களுக்கானத இன்னொருவன்கிட்ட கொடுத்துட்டு போறீங்களே? இது பெரிய பெருந்தன்மைங்க” என்று அந்தப் பெரியவர் சொல்ல
” தம்பி இன்னொன்னும் சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே?” என்ற அந்தப் பெரியவர் கொஞ்சம் கெஞ்சலாக கேட்டார்
” ஐயா சொல்லுங்க. நான் என்ன பண்ணனும்? என்று பிரகாசம் கேட்க
“நாளைக்கு நான் இங்க வாரேன். எனக்கு மீன் பிடிச்சு தரீங்களா?” என்று அந்தப் பெரியவர் கேட்க
” என்ன பெரியவரே இப்படிச் சொல்லிட்டீங்க. நாளைக்கு வாங்க உங்களுக்கும் நான் மீன் பிடிச்சு தரேன்”
என்று சொன்னார் பிரகாசம்.
வரும் நாளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார் அந்தப் பெரியவர். அவர் மனதுக்குள் கோடி கோடியாய் குதித்து விழுந்தன, மீன்கள். பிறருக்கு அள்ளிக் கொடுத்த சந்தோஷத்தில் நடந்து கொண்டிருந்தான், பிரகாசம்.
குளத்தில் அமர்ந்து தூண்டில் போட்டுக் கொண்டிருந்தார்கள் மீன்பிடிப்பவர்கள். நாளைக்கு நமக்கும் மீன்கள் கிடைக்கும் என்ற சந்தோஷத்தில், குதித்துக் கொண்டிருந்தார், பெரியவர்.