சிறுகதை

தூங்கும் அடுப்பு! – வேலூர்.வெ.ராம்குமார்

வீட்டிற்கு முன்பு ஒரே கூட்டம்…

பரிமளாவும் கோபாலனும் டிபன் கடை வியாபாரத்தில் பிசியாக இருந்தார்கள்..

அப்போது ஊரிலிருந்து ஐந்து வருடத்திற்குப் பிறகு சொந்த ஊருக்கு வரும் மகனை வரவேற்கக் கூட நேரம் இல்லை.

வீட்டுக்குள் நுழைந்தவன் கொண்டு வந்த பேக்கை வைத்துவிட்டு வீட்டின் பின்பக்க தோட்டத்திற்கு சென்றான். தோட்டத்தில் ஒரு மூலையில் கரி பிடித்த விறகு அடுப்பு தூங்கிக் கொண்டிருந்தது.’ ஒரு காலத்தில் தனக்கும் இந்த ஊர்காரர்களுக்கும் படியளந்த அடுப்பாச்சே..கேஸ் ஸ்டவ்,சிலிண்டர் என சமையல்களும் மாறியதும் அடுப்புகள் புறக்கணிக்கபடுவது காலத்தின் கோலமே..குளித்ததும் வெளியே வந்தான். இப்போது முன்பை விட கூட்டம் குறைந்திருந்தது.. அப்போது கடையில் தொங்கிய விலைப்பட்டியல் போர்டைப் பார்த்தான். அவன் முகம் இருண்டு போனது..

‘அப்பா! கொஞ்சம் வெளியே போய்ட்டு வர்றேன்..’ தந்தையின் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

மாலை…

‘நான் வந்ததிலேயிருந்து பார்க்கறேன்.வீட்ல புதுசா ஒரு பொருள் கூட வாங்கலை. வியாபாரத்திலும் முன்னேற்றம் இருந்த மாதிரி தெரியலை. நான் அனுப்பற பணம், டிபன் கடையில வர்ற பணத்தையெல்லாம் என்ன பண்றீங்க?

‘நீ அனுப்புற பணம் எங்களுக்கு மருந்து, மாத்திரை வாங்கறதற்கும் தொழிலுக்கு வட்டி கட்டறதற்கும் சரியா இருக்குதுப்பா.’

‘அப்பா! முப்பது வருஷத்துக்கு முன்னே இரண்டு ரூபாய்க்கு இட்லி வித்தீங்க.. இப்பவும் அதே ரெண்டு ரூபாய்க்கு இட்லி வித்து,தேங்காய், புதினா சட்னி,சாம்பார் கொடுத்தால் எப்படி கட்டுப்படியாகும். தப்பு உங்க மேலயில்லை.. நீங்க செய்யற வியாபாரத்துலதான் இருக்கு.. இனி, நான் பட்டணத்துல போய் ஓட்டல்ல மாஸ்டரா வேலை பார்க்கப் போறதில்லை.’

‘என்னப்பா இப்படி ஒரு குண்டை தூக்கி போடறே? அப்பா கேட்கவும்

‘நான் சொல்றதை மட்டும் கேளுங்கப்பா.. முதல்ல, இந்த மூலையில பல வருஷமா தூங்கிட்டிருக்கற அந்த அடுப்பை சாணத்தால மொழுகி தயார்படுத்துங்க. இனி கேஸ் சிலிண்டரெல்லாம் வேண்டாம்.

‘கேஸ் சிலிண்டர் இல்லாமல் எப்படிப்பா தொழில் பண்ணுவே?

‘நாளைக்கு பாருங்க! இனி நீங்க இரண்டு பேரும் ரெஸ்ட் எடுங்க என கூறிய மகனை இருவரும் புரியாமல் பார்த்தார்கள்.

****************

மறுநாள்….

இதுவரை இரண்டு ரூபாய்க்கு விற்ற இட்லி ஐந்து ரூபாயாகவும் ஐந்து ரூபாய்க்கு விற்ற தோசை 15 ரூபாய்க்கும் விற்றான்..

வந்தவர்களோ முதலில் முணுமுணுத்தாலும் அடுப்பு சமையலே தனி ருசிதான். இதற்கு பணம் தாராளமாகக் கொடுக்கலாம் என புகழ்ந்தே சென்றார்கள்.

இதையெல்லாம் வீட்டு ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்த பரிமளா – கோபாலனுக்கோ ஆச்சர்யம்.

அனைவரும் வந்து செல்ல….. சீக்கிரமே டிபன் காலியானது.

பெற்றோர்களிடம் வந்தவன், ‘அப்பா! நான் நேற்று ஊர் பூரா சுத்தி வந்தேன். எல்லா மெஸ், ஓட்டல்லேயும் நம்மை விட விலை அதிகம்தான். சிலிண்டர்ல தயார் பண்றாங்க. அதனாலதான், நான் பாரம்பர்ய முறையில அடுப்பு சமையலைத் தேர்வு செஞ்சேன். நம்மாளுங்க ருசி அதிகமா இருந்தா அதற்காக எவ்வளவு பணம் செலவு செய்யவும் தயாராயிருப்பாங்க. அவங்க ருசிக்காக முப்பது, நாற்பது ரூபாய் செலவு பண்றதுல தவறில்லையே. நாம பணக்காரர்களா இருந்தா, ஜனங்களுக்கு குறைஞ்ச விலையில சேவை பண்ணலாம். நாமளும் இன்னும் ஏழைகள்தானே.. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைச்சாதான் தொழிலுக்கு மரியாதை..”

மகன் வார்த்தையிலுள்ள உண்மையை இப்போது இருவருமே ஒத்துக் கொண்டார்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *