சிறுகதை

தூக்கம் உன் கண்களை|கி.ரவிக்குமார்

காலையில் இருந்தே என் மனைவி மகேஸ்வரி படபடப்பாகவே இருந்தாள். கோவையில் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் எங்கள் பையனை பார்க்க இன்று கிளம்புகிறோம். அவன் ஹாஸ்டலில் சேர்ந்ததில் இருந்து இப்போது தான் பார்க்கவே கிளம்புகிறாள். அதனால் தான் அந்த படபடப்பு. அவனுக்கு பிடித்ததை பார்த்துப் பார்த்துச் செயவது ஒரு பக்கம்; அதை கொடுக்க வேண்டியது இன்னொரு பக்கம் எனத் தயாராக இருந்தாள். இனி வரவேண்டியது இரவு தான்.

இதோ…! பொழுதை இழுத்து தள்ளி, மாலையை கடந்து இரவுக்குள் வந்தாகி விட்டது.

எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஆம்னி பஸ் ஸ்டாண்டுக்கும் வந்து சேர்ந்தோம். வந்து போகும் பஸ்ஸை எல்லாம் நம்முடையதா என்று கேட்டு கேட்டு ஏமாந்து நிற்கிறாள்.

இதோ பஸ் வந்து விட்டது.

வெண்பனி போல பளபளவென்று காற்றில் மிதந்து வந்து நின்றது பஸ். லக்கேஜை பஸ்ஸுக்கு பக்கவாட்டில் வைத்து விட்டு ஒவ்வொருவராக ஏறினோம்.

மெல்ல ஏறி உள்ளே பார்த்தவளுக்கு பிரமிப்பு. பல முறை ஆம்னி பஸ்ஸில் சென்றிருந்தாலும் இது புது அனுபவம். ஏனென்றால் இது பெர்த் அமைப்புள்ள பஸ். முதன் முதலாக, பஸ்ஸில் பெர்த்தை பார்த்த என் காதல் மனைவி அதிர்ந்து தான் போனாள். கீழே உட்கார, மேலே படுக்க, என்ற அமைப்பில் இருக்கும் பஸ் அது! அதில் எங்களுக்கு சீட் புக் பண்ணி இருந்தேன்! உள்ளே, குதூகலமாக என் அருகில் மெத் என்று அமர்ந்தாள்.

சின்னப் பொண்ணு போல என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு வேறு!

அப்போது எங்களுக்கு நேர் மேலே இருக்கும் பெர்த்தில் ஒரு இளம் வயது ஜோடி மெதுவாக ஏறியது! அந்தப் பெண் சுடிதார் அணிந்திருந்தாள். அது காற்றில் பறந்து என் முகத்தில் தடவியது! என் மனைவி அதைச் சட்டென தட்டி விட்டு, கூடவே ஏறிய இளைஞனை பார்த்து குழம்பிப் போனாள். அவர்கள் பெர்த்தில் நுழைந்து திரையை இழுத்து விட்டனர்.

“என்னங்க! திரை எல்லாம் போட்டு மூடி இருக்குங்க!”

என்று திடுக்கிட்டவள், பின் குரலை தளர்த்தி, “எப்படிங்க இரண்டு பேர் படுப்பாங்க!” என்றாள்.

“அதெல்லாம், தாராளமா படுக்க இடம் இருக்கும்!” என்றேன்.

“அதில்லைங்க! வேற வேற இரண்டு பேருக்கு இங்கே எப்படி ஒன்னா டிக்கெட் கொடுப்பாங்க!”

“அதெல்லாம் கொடுக்க மாட்டாங்க! ஜென்ஸ் – லேடீஸ் பார்த்து தான் டிக்கெட்டே புக் ஆகும்!” என்றேன்.

“அப்போ, இப்ப மேலே ஏறினவங்க…!” இழுத்தாள்.

“தெரிஞ்சவங்க தான் சேர்ந்து வருவாங்க! மனசை அலைபாய விடாதே!” என்றேன்.

“இல்லைங்க! இப்போ மேலே ஏறினவங்க … கீழே தனித்தனியா தாங்க நின்னாங்க!” ஒருவித படபடப்புடன் சொன்னாள். கண்களில் சந்தேக கேள்வி. “தெரிஞ்சவங்களா இருப்பாங்க! சும்மா இரு!” என்று ஒப்புக்கு சொல்லி சமாதானப்படுத்தினேன். அவள் கண்களில் வயதுக்கு மீறிய கனவுகள். சீட்டில் சாய்ந்து படுத்தவள், அவ்வப்போது மேலே பார்த்து பீதியாவாள். சிரித்துக் கொண்டேன்.

“நீ பஸ்ஸுல படுப்பியோ மாட்டியோ தான்னு தான், நமக்கு பெர்த் போடலை. திரும்பிப் போகும் போது போட்டுருவா!” காதோடு கேட்டதும்

“சே! சே! ஆசையப்பாரு! எங்க வந்து என்ன பேசுறீங்க!” என்று வெட்கம் கலந்து சொன்னவளின் கோபம் பொய்யானது என்று எனக்குத் தெரிந்தது.

கோவை வந்தது. மேல் பெர்த்தில் இருந்து இறங்கியவர்கள் கடல் போன்ற மக்கள் கூட்டத்தில் கரைந்து போனார்கள். ஆனாலும் பிரமிப்பும் அதிர்ச்சியும் இவள் கண்களை விட்டு அகலவில்லை.

ஹாஸ்டல் பக்கத்திலேயே ரூம் போட்டிருந்தோம்.

காலையில் கிளம்பி பையனை ஹாஸ்டலில் போய் பார்த்தோம். அவனோடு சேர்ந்து, ஆட்டோ பிடித்து, கடைகளில் படிப்படியாக ஏறி இறங்கி, அவனுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து..! அப்பப்பா..! முட்டி கழண்டு விட்டது. அவளுக்கோ நாக்கே தள்ளியது. இரவு ஹாஸ்டலிலேயே சாப்பிட்டு விட்டு, பையனிடம் அழுது விடைபெற்று ஆட்டோ ஏறி ஆம்னி பஸ் ஸ்டாண்டு வந்தோம்.

அங்கே நிற்கும் ஏசி பஸ்ஸை பார்த்ததும் அவளுக்குள் எதிர்பார்ப்பு எகிறியது.

“ஏசி பஸ்ஸா! எப்பங்க டிக்கெட் போட்டீங்க!”

கண்கள் மலர என்னை பார்த்து கேட்டவளிடம், பையிலிருந்து மல்லிகைப்பூவை எடுத்து கொடுத்தேன். அவளுக்கோ வெட்கம் பிடுங்கி தின்றது.

“என்னங்க இது! சின்னப்பசங்க போல! எப்பங்க வாங்குனீங்க!” என்றபடி அள்ளி சூடிக்கொண்டாள்.

பஸ்ஸுக்குள் வந்தவள் …. மேலும் கீழும் பெர்த் பார்த்து இன்னமும் ஆச்சர்யப்பட்டாள். ஏசி குளிர். குளிருக்கு கைகளை கட்டிக் கொண்டாள்.

“நமக்கு கீழேயே பெர்த்! நம்பர் 7,8. உள்ளே போ! நான் டிக்கெட் ‘பின்’ நம்பர் சொல்லிட்டு வந்திடுறேன்!” என்று சொல்லி, கண்ணடித்து திரையை மூட, ஓரக் கண்ணால் என்னை பார்த்து காதல் பொங்க சிரித்தாள். இறங்கி, பஸ் ஆபீஸுக்குள் போனேன்.

“உங்களுக்கு தான் சார் வெயிட்டிங். நேரா பஸ்ஸுக்கு போயிட்டீங்களா!” என்றபடி செல்போன் பார்த்து செக் செய்து அனுப்பினார்.

செல்லை வாங்கிக் கொண்டு பஸ்ஸுக்கு வந்தேன்.

எனக்கு முன்னால் ஜீன்ஸ் போட்ட ஒரு கல்லுரி பெண் ஒருத்தி ஏறினாள். நம்பர் பார்த்த படி வந்தவள் எங்களுக்கு எதிரே அப்பர் சிங்கிள் பெர்த்தில் ஏறினாள். இது போல விஷயங்களுக்கு ஜீன்ஸ் வசதி தான்!

அவள் ஏறியதும் எங்கள் பெர்த் பக்கம் திரும்பி, திரையை விலக்கியவன், உள்ளே பார்த்ததும் அதிர்ந்தேன். உள்ளே, ஒய்யாரமாக, ஒரு முயல்குட்டி போல ஓரத்தில் பம்மி படுத்து, தூக்கத்தின் உச்சிக்கே போயிருந்தாள் என் மனைவி. உடலில் அத்தனை களைப்பு! முகத்தில் அப்படி ஒரு குழந்தைத்தனம். தலையில் சூடிய மல்லிகையை தலையணை போல வைத்திருந்தாள்.

பஸ் மெல்ல கிளம்பி, மெதுவாக தாலாட்டி, சாலையில் இடம் பிடித்து, தன் பயணத்தைத் தொடங்கியது!

ஜன்னல் வழியே மெல்லிய வாடைக்காற்று உள்ளே நுழைந்து தடவிக் கடந்தது!

போர்வையை எடுத்து போர்த்தி விட்டேன். குழந்தையைப் போல உள்ளே சுருண்டு கொண்டாள்.

திரைச் சீலையின் மெல்லிய விலகலில் தெரிந்த என் மனைவியையும் மல்லிகைப் பூ வாடையையும் கண்டு, மேல் பெர்த்தில் இருந்த பெண் திரும்பி எட்டிப் பார்த்தாள். பார்த்தவள், தன் பெரிய விழிகளை விரித்து, ஆயிரம் கேள்விகளுடன் இமைகளை வெட்கத்தோடு படபடக்க பார்த்தாள்.

நான் மெல்லிய சிரிப்போடு, திரையை மூடி விட்டு, ஜன்னல் ஓரத்தில் சம்மணம் போட்டு அமர்ந்து

சன்னமான வெளிச்சத்தில் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *