செய்திகள்

துவரம் பருப்பு, பாமாயில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கிடைக்கும்: தமிழக அரசு உறுதி

Makkal Kural Official

சென்னை, மே.17-

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மே மாதத்திற்குரிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டுகள் கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பொது வினியோக திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்து 941 ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சர்க்கரையுடன் துவரம் பருப்பு, பாமாயில் எண்ணெயும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், கடந்த சில நாட்களாக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் எண்ணெய் வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-–

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் எண்ணெய் கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந்தேதி முதல் ஒவ்வொரு மாதமும் திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி மூலம் கொள்முதல் செய்யப்பட்டு நியாய விலைக் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த மே மாதத்திற்குரிய தேவையான 20 ஆயிரம் டன் துவரம் பருப்பு–கனடா மஞ்சள் பருப்பு மற்றும் 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளுக்கு உரிய ஒப்பந்தப்புள்ளி இந்திய தேர்தல் ஆணையத்தின் 18.4.2024 தேதிய ஒப்புதலின்படி 20.4.2024 அன்று கோரப்பட்டு 2.5.2024 அன்று ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 4.5.2024 அன்று விலைப்புள்ளி திறக்கப்பட்டது.

இதில் குறைந்த விலைப்புள்ளி அளித்திருந்த பருப்பு மற்றும் பாமாயில் ஒப்பந்ததாரர்களுடன் விலைக்குறைப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குழுமத்தின் ஒப்புதலின்படி துவரம் பருப்பு வினியோகிப்பாளர்கள் 4 பேருக்கும், பாமாயில் வினியோகிப்பாளர்கள் 3 பேருக்கும் கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டு நாளது தேதி வரை நடப்பு மே மாதத்திற்கு வினியோகிப்பதற்காக ரேஷன் கடைகளுக்கு 5 ஆயிரத்து 405 டன் துவரம் பருப்பு மற்றும் 31 லட்சத்து 19 ஆயிரத்து 722 பாமாயில் பாக்கெட்டுகள் நகர்வு செய்யப்பட்டுள்ளன. ஆகவே, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மே மாதத்திற்குரிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டுகள் கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *