சிறுகதை

துரோகம் துரத்தும் | தருமபுரி சி.சுரேஷ்

ராதா மனசாட்சிக்கு பயப்படுபவள்; வெகுளி. யார் எதை சொன்னாலும் அப்படியே நம்பி விடுவாள்.

ராதாவுக்கு பெற்றோர் கிடையாது. சிறுவயதிலே ஒரு பஸ் விபத்தில் இறந்து விட்டார்கள்

அவளுடைய பெரியப்பா அவளைச் சிறுவயதிலே ஹாஸ்டலில் கொண்டு போய் சேர்த்து விட்டார்.

அந்த ஹாஸ்டல் வாழ்வு ராதாவுக்கு சிறையாகத்தான் இருந்தது.

எப்படியோ கஷ்டப்பட்டு பிளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரிக்குள் நுழைந்தாள்.

அவளுக்கு உறவு என்று சொல்லிக்கொள்ள பெரிதாக யாரும் இல்லை.

விடுமுறையில் அம்மாவைப் பெற்ற பாட்டி வீட்டுக்கு வருவாள்.

கிராமத்தில் தனியாக வசித்து வந்தாள் பாட்டி.

அங்குதான் எதிர்வீட்டுப் பையன் கதிரேசன் வார்த்தைக்கு இரையானாள் ராதா.

அவனை உயிருக்குயிராக நேசித்தாள் ; நம்பினாள். அவனோ தனக்கு கிடைத்தவரை லாபம் என்று அவளின் அழகை ரசித்து ருசித்தான்.

நாட்கள் சென்றது “என்னை திருமணம் செய்துகொள்” என்றாள்.

அவனோ “வயிற்றில் வளரும் குழந்தையை கலைத்துவிடு. அதற்கு பிறகு நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்” என்றான்.

இவளோ மறுத்தாள்.

“எப்படி ஒரு உயிரை கொள்வது” என்றாள்.

இருவருக்கும் வாக்குவாதம் உண்டானது. சண்டை வந்தது பிரிந்தார்கள்.

எப்படியோ ஊராரின் பழி சொல்லோடு தன் பாட்டியின் வீட்டிலேயே வசித்து வந்தாள். கல்லூரியின் படிப்புக்கு முற்றுப்புள்ளி.

அடிக்கடி பக்கத்தில் இருக்கும் நர்ஸ் அக்கா அவளுடைய உடல் நிலையை சரியாக கவனித்து வந்தார்.

ஓரிரவு வயிற்று வலி அதிகமானது .அந்த நர்ஸ் பரிசோதித்துவிட்டு “பிரசவம் கடினமாயிருக்கும் வயிற்றில் இருக்கும் பிள்ளை தலைகீழாக இருக்கிறது; பட்டணத்திற்குதான் அழைத்துச் செல்லவேண்டும்” என்றாள்.

பட்டணத்தில் டாக்டர் சலீமின் ஹாஸ்பிடலில் பிரசவ வார்டில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

முடிவாக அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதது அச்சு அசலாக ராதாவை போலவே இருந்தது.

ராதாவுக்கு தீவிர சிகிச்சை முடிந்தவரை செய்தும் அவளோ இறந்து விட்டாள்.

கிராமத்து பாட்டி அழுதாள், புலம்பினாள்.

பாட்டி அந்தக் குழந்தையை தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று வளர்த்தாள்.

எதிர்வீட்டு கதிரேசன் திருமணமாகி ஐந்து வருடம் ஆகியும் குழந்தை இல்லாமல் ஏக்கத்தோடு பாட்டியின் கையில் வளர்ந்திருந்த தன் குழந்தையை கண்ணீரோடு பார்த்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *