போஸ்டர் செய்தி

துரைமுருகனின் வீட்டை முற்றுகையிட முயன்ற தே.மு.தி.க.வினர்

வேலூர்,மார்ச்.8–

வேலூரில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீட்டை தே.மு.தி.க.வினர் முற்றுகையிட முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்துப் பேசும்போதே தி.மு.க. பக்கமும் தே.மு.தி.க. பேசியதாகத் தகவல் வெளியானது. அதை துரைமுருகனும் உறுதி செய்தார். தங்களிடம் கூட்டணி குறித்துப் பேச வந்ததாகவும், இடம் இல்லை என அனுப்பிவிட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, துரைமுருகனிடம் 10 நாட்களுக்கு முன்பே தான் பேசியதாக தே.மு.தி.க. துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்தார்.

இந்நிலையில், வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள துரைமுருகனின் வீட்டை இன்று தே.மு.தி.க.வினர் சிலர் மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் திடீரென முற்றுகையிட முயன்றனர். துரைமுருகன் கருத்துகளால் கோபமடைந்த அவர்கள் “துரைமுருகன் ஒழிக” என கோஷமிட்டனர்.

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி முற்றுகையிட முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.இதனால் போலீசாருக்கும் தே.மு.தி.க.வினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, தே.மு.தி.க.வினர் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன்பின், தே.மு.தி.க.வினரை போலீஸார் கைது செய்தனர். இதனிடையே, தி.மு.க.வினர் சிலரும் அப்பகுதிக்கு வந்து துரைமுருகன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக கோஷமிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *