செய்திகள்

துருக்கி நிலநடுக்கத்தை 3 நாட்கள் முன்பே வெளிப்படுத்திய நெதர்லாந்து விஞ்ஞானி

இஸ்தான்புல், பிப். 7–

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் துருக்கி நிலநடுக்கத்தை மூன்று நாட்களுக்கு முன்பே கணித்த நிகழ்வு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி, சிரியாவில் நேற்றைய தினம் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அதிகாலை நேரம் தொடங்கி மாலை வரை 7.8, 7.4, 7.5 என அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சில நிமிட இடைவெளியில் 40க்கும் மேற்பட்ட முறை பூமி குலுங்கியுள்ளது. இதனால் கட்டிடங்கள் அனைத்தும் சீட்டு கட்டுகள் போல சரிந்து விழுந்து பெரும் சேதத்தை உண்டாக்கியிருக்கிறது.

இதுவரை 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் பேரிடர் மீட்பு படைகளை உதவிக்கு அனுப்பி வைத்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் கைகோர்த்து செயல்பட்டு வருகின்றனர்.

கணித்த ஆராய்ச்சியாளர்

இந்நிலையில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பிராங்க் ஹூகர்பீட்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் மூன்று நாட்களுக்கு முன்பே துருக்கியில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்பதை கணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக அவரது டுவிட்டர் பக்கத்தில் தேடினால் பிப்ரவரி 3 ஆம் தேதி மாலை 5.33 மணிக்கு பதிவொன்றை போட்டுள்ளார்.

அதில், கூடிய விரைவிலேயே அல்லது பின்னரோ 7.5 ரிக்டர் அளவுகோலில் தெற்கு – மத்திய துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனானில் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பிப்ரவரி 4 முதல் 6ஆம் தேதிக்குள் 6 அல்லது அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்க பாதிப்புகள் உண்டாகும் எனவும் தெரிவித்திருந்தார்.

அவர் கணித்தது போலவே பிப்ரவரி 6ஆம் தேதி அதிகாலை 4.17 மணிக்கு துருக்கியின் காஸியன்டெப் நகரில் 18 கிலோமீட்டர் ஆழத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து அதிர்வுகள் ஏற்பட்டு ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி எடுத்துவிட்டது. இந்நிலையில் பிராங்க் ஹூகர்பீட்ஸின் பதிவு தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.

இந்த பிராங்க் ஹூகர்பீட்ஸ் நெதர்லாந்து நாட்டில் உள்ள எஸ்எஸ்ஜிஎஸ் எனப்படும் சோலார் சிஸ்டம் ஜியோமெட்ரி சர்வே (SSGS) என்ற நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார். நிலநடுக்கம் ஏற்பட்டதை அறிந்த அவர் மற்றொரு பதிவில், துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இத்துடன் நிற்காது. அடுத்தடுத்து பாதிப்புகள் உண்டாகும் என எச்சரித்துள்ளார். இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *