இஸ்தான்புல், ஜன. 22–
துருக்கியில் உள்ள கிராண்ட் கார்டால் என்ற பனிச்சறுக்கு விடுதியின் ஓட்டலில் ஏற்பட்ட தீவிபத்தில் 66 பேர் பலியாகி உள்ளனர்.
வடமேற்கு துருக்கியின் பிரபலமான இடமான கர்தல்காயா பனிச்சறுக்கு ரிசார்ட்டில் 2 வார பள்ளி விடுமுறையை கொண்டாட ஏராளமானோர் குவிந்துள்ளனர். போலு மாகாணத்தில் உள்ள கர்தல்காயாவில் உள்ள கிராண்ட் கார்டால் என்ற ரிசார்ட்டில் 12 மாடிகளை கொண்ட இந்த பனிச்சறுக்கு விடுதி உள்ளது. விடுமுறையை முன்னிட்டு அப்பகுதியில் இருந்த அனைத்து ஓட்டல்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஓட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
66 பேர் பலி
தீவிபத்து ஏற்பட்ட சமயத்தில் ஓட்டலில் 234 பேர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அறைகள் முழுவதும் புகை நிரம்பியதையடுத்து தீ பரவியதை மக்கள் உணர்ந்துள்ளனர். தீயிலிருந்து தப்பிக்க பலர் மேல் தளங்களில் இருந்து கயிறு, பெட்ஷீட் போன்றவற்றை பயன்படுத்தி கீழே இறங்கியுள்ளனர். சிலர் பயத்தில் கீழே குதித்துள்ளனர். இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 66 பேர் இறந்துள்ளனர். ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 51 பேர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் குன்றின் ஓரத்தில் ஓட்டல் அமைந்திருப்பதால் தீயை அணைக்கும் முயற்சிகள் மேலும் தடைபட்டன. தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். விசாரணையை வழிநடத்த 6 வழக்கறிஞர்கள் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.