மீட்புப் பணியில் 400 க்கும் மேற்பட்ட ஊழியர்கள்
துருக்கி, பிப். 14–
துதுருக்கி தங்கச் சுரங்கத்தில் பணி செய்த 9 தொழிலாளர்கள், நிலச்சரிவால் உயிருடன் புதைந்த நிலையில், அவர்களை மீட்கும் பணியில் 400 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
துருக்கியின் எர்சின்கான் மாகாணத்தில் இலிக் நகரத்தில் கோப்லர் என்ற தங்கச்சுரங்கம் இயங்கி வருகிறது. நேற்று மதியம் 2.30 மணிக்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்டதில் சுரங்கத்தை சுற்றியுள்ள மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன. நிலச்சரிவு ஏற்படும் காட்சிகளை அப்பகுதிக்கு அருகில் இருந்த தொழிலாளர் ஒருவர் படம்பிடித்துள்ளார்.
நிலச்சரிவு ஏற்பட்ட போது 9 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் 9 பேரும் நிலச்சரிவில் புதைந்ததாகவும், அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் சுமார் 400 பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சயனைட் பாதிப்புக்கு வாய்ப்பு
சுரங்கப் பொறியாளர்களின் அறையின் தலைவர் அய்ஹான் யுக்செல் இந்த சம்பவம் தொடர்பாக பேசுகையில், நிலச்சரிவைத் தொடர்ந்து சுரங்கத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சயனைட் சுற்றியுள்ள பகுதியை மாசுபடுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, நீர் மாசுபடுவதைத் தடுக்க யூப்ரடீஸ் நதிக்கு செல்லும் நீரோடை தடுப்புகள் கொண்டு மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
துருக்கி, சிரியா மற்றும் ஈராக் வழியாக யூப்ரடீஸ் நதியில் சயனைடு கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து 2020 இல் இந்த சுரங்கம் மூடப்பட்டது. பின் இந்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டு, தூய்மைப்படுத்தும் நடவடிக்கை முடிந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
துருக்கியில் இது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்னும் பதிவாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டில், கருங்கடல் கடற்கரையில் உள்ள அமாஸ்ரா நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பில் 41 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அதேபோல் 2014 ஆன் ஆண்டு, மேற்கு துருக்கியின் சோமாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நடந்த விபத்தில், 301 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.