செய்திகள்

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்தது

6 நாட்களுக்கு பின் கர்ப்பிணி, குழந்தைகள் மீட்பு

அங்காரா, பிப்.13–

துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தால் துருக்கி மற்றும் அதன் அண்டை நாடான சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்நிலையில் உள்நாட்டுப் போர், போதிய மருத்துவக் கட்டமைப்பு வசதியில்லாத சிரியாவின் நிலை மிக மோசமாக உள்ளதால் அங்குள்ள மக்கள் இந்த பூகம்பத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

ஏற்கெனவே போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவிற்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்ப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதை ஒப்புக் கொண்டுள்ள ஐ.நா. சபை, இந்த பூகம்பத்தால் உயிரிழப்பு 70 ஆயிரத்தையும் கூட கடக்கலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் துருக்கியில் நேற்றைய தினம் கர்ப்பிணிப் பெண், சிறு குழந்தைகள் எனப் பலரும் 6 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

சிரியாவின் வட மேற்கு பகுதிக்கு ஐ.நா. குழு, நிவாரணப் பொருட்களை அனுப்பியது. துருக்கி வழியாக சிரியாவை இந்த நிவாரணப் பொருட்கள் அடைந்தது. ஆனால் அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராக உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளதால் பல ஆண்டுகளாகவே சிரியாவின் சுகாதார கட்டமைப்பு மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இதுபோன்ற மிகப்பெரிய இயற்கைப் பேரிடரை எதிர்கொள்ளும் அளவிற்கு அதன் சுகாதார கட்டமைப்பு இல்லை. இது ஒருபுறமிருக்க சிரியா மீது பல்வேறு மேற்கத்திய நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. உள்நாட்டுப் போர், பொருளாதாரத் தடைகள், பூகம்பம் என்று அடுக்கடுக்கான துயரங்களால் சிரிய மக்கள் வேதனையில் வெந்து இப்போது வெகுண்டெழுந்துள்ளனர்.

சிரியாவுக்கு நேரடியாகச் சென்ற உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேஸஸ், “சிரியாவில் உள்நாட்டுப் போர், கொரோனா பாதிப்பு, காலரா, பொருளாதார நெருக்கடியுடன் இப்போது இந்த பூகம்பமும் சேர்ந்துள்ளது. சிரியா மீண்டெழ இன்னும் அதிகமான உதவிகள் தேவை” என்றார்.

அரசு மீது மக்கள் கோபம்

துருக்கியில் நிலநடுக்க பாதிப்புக்கு பின்னர், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் விரைவாக நடைபெறவில்லை என அதிபர் எர்டோகன் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. அரசியல் மற்றும் மத ரீதியிலான காரணங்களும் கூறப்படுகிறது. துருக்கியில் சில பகுதிகளில் குழுக்கள் இடையே நடந்த மோதலால், ஆஸ்திரிய ராணுவம் மீட்பு பணியை நிறுத்தி வைத்த தகவலும் வெளிவந்தது.

துருக்கியில் இதுபோன்று குறுகிய காலத்தில் மீட்பு பணியை விரைவாக மேற்கொள்ளாமல் எண்ணற்றோர் உயிரிழந்த அவல நிலை காணப்படுகிறது. நேற்றுடன் ஒரு வாரம் கடந்த நிலையில், அடுக்கடுக்காக சரிந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதேபோன்று அதியமான் மாகாணத்தில் தென்கிழக்கு நகரில் எலிப் புஸ்ரா ஆஜ்டர்க் என்பவர் இடிபாடுகளில் சிக்கிய மாமா மற்றும் அத்தை ஆகியோரை மீட்க கட்டிட இடிபாடுகளுக்கு வெளியே நின்று உள்ளார்.

அவரது அத்தையின் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்து கிடந்தனர். 3 நாட்களாக உதவிக்காக காத்திருந்தும், யாரும் வராத சூழலே காணப்பட்டது என எலிப் கூறியுள்ளார். குறைந்த மீட்பு படையினரே உள்ளனர். அதுவும், யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்று உறுதியாக தெரிந்தபோது மட்டுமே அந்த பகுதிக்கு அவர்கள் வர முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மந்தமான மீட்பு பணிகள் காரணமாக, இடிபாடுகளில் சிக்கி இதுவரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்

துருக்கியின் காக்ராமன்மராஸ் நகரில் இருந்து தென்கிழக்கே 24 கி.மீ. தொலைவில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கம் 15.7 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது.

இந்த நகரம் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. ஒரு வாரம் கழிந்த நிலையில், மீண்டும் அதே நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள், மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *