செய்திகள்

துருக்கி அதிபர் தேர்தல்: 50 சதவீத வாக்குகள் யாருக்கும் இல்லாததால் மீண்டும் 28 ந்தேதி தேர்தல் வாய்ப்பு

இஸ்தான்புல், மே 15–

துருக்கி அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் உள்பட எந்த கட்சியும் 50 சதவீத வாக்குகளை பெறாத நிலையில், மீண்டும் 28 ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

துருக்கியில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சித் தலைவரான எர்டோகனுக்கு (வயது 69) எதிராக, குடியரசு மக்கள் கட்சித் தலைவரான கெமால் கிலிச்டாரோலு (வயது 74) ஆறு எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் தற்போதைய அதிபர் எர்டோகனைவிட, எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் கெமால் கிலிச்டாரோலு அதிக வாக்குகள் பெறுவார் எனத் தெரிய வந்ததால் இந்தத் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

யாருக்கும் பெரும்பான்மையில்லை

ஆனால், துருக்கி அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் எர்டோகன் 49.6% வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிபர் எர்டோகனுக்கு எதிராக 6 கட்சிகளின் கூட்டணி சார்பில் போட்டியிடும் கிலிசிக் 44.7% வாக்குகள் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார். மூன்றாவது வேட்பாளரான சினான் ஓகன் 5.28% வாக்குகளைப் பெற்றுள்ளார்.

துருக்கி தேர்தல் சட்ட நடைமுறைப்படி, போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவர் பதிவான வாக்குகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும் என்பது விதி. அவ்வாறு பெறாவிட்டால் மீண்டும் தேர்தல் நடத்தப்படும். அந்த வகையில் தற்போது, தற்போதைய அதிபர், எதிர்க்கட்சி வேட்பாளர் என யாருமே 50 சதவீத வாக்குகளை பெறவில்லை. எனவே, மே 28-ஆம் தேதி அதிபர் தேர்தல் மீண்டும் நடத்தப்படும்.

நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சி தலைவரான ரிசப் தயீப் எர்டோகன், கடந்த 20 ஆண்டுகளாக அதிபர் பதவியில் இருந்து வருவதால், இந்தத் தேர்தல் பெரும் சவாலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *