இஸ்தான்புல், பிப். 7–
துருக்கியில் இரண்டாவது நாளாக இன்றும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.
துருக்கியில் நேற்று மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மீண்டும் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கி, சிரியா நாடுகளில் ஏற்பட்ட நேற்று நிலநடுக்கத்தால் 4 ஆயிரத்து 300 ஐ தாண்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தால் துருக்கியில் தற்போது வரை 2921 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 15,834 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் இதுவரை 1451 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 3531 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் இரு நாடுகளிலும் சேர்த்து இதுவரை 4372 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
20 ஆயிரத்தை கடக்கும்
கொட்டும் பனி மழையில் கான்கிரீட் குவியலுக்கு நடுவே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெறுகின்றன. உயிரிழந்தவர்களின் சடலங்களும் இடிபாடுகளுக்கிடையிலிருந்து எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் இருநாடுகளிலும் சேர்த்து பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடக்கலாம் என தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த துருக்கி, சிரியாவில் இதுவரை 5600 கட்டிடங்கள் தரைமட்டமாகியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மேலும் பல கட்டிடங்கள் இடிந்துள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள், காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை துருக்கியின் மத்திய பகுதியில் மையம் கொண்டு 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேற்று மட்டும் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகும் சிரியா, துருக்கிக்கு உலக நாடுகள் நேசக்கரம் நீட்டி வருகின்றன.