அங்காரா, பிப்.18–
துருக்கி நிலநடுக்கம் ஏற்பட்டு 278 மணி நேரம் கடந்துள்ள நிலையில் இடிபாடுகளில் இருந்து 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
துருக்கி நாட்டில் கடந்த 6-ந் தேதி ஏற்பட்ட நில நடுக்கம் அந்த நாட்டையே உலுக்கி உள்ளது. அதன் அண்டை நாடான சிரியாவும் இந்த நில நடுக்கத்தால் பெரும்பாதிப்புக்கு உள்ளானது. இவ்விரு நாடுகளிலும் பல மாடி கட்டிடங்கள் பல்லாயிரக்கணக்கில் இடிந்து தரை மட்டமாகின. இடிபாடுகளில் இருந்து இறந்தவர்களின் உடல்களையும், உயிரோடு இருப்பவர்களையும் தேடும் பணி இன்னும் தொடர்கிறது. துருக்கியில் நில நடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்து விட்டது. துருக்கியில் 12 நாட்களுக்கு பிறகு இடிபாடுகளுக்குள் இருந்து 45-வயதான நபர் ஒருவர் உட்பட 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது மீட்புக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
துருக்கியின் ஹடாய் மாகாணத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் கீழ் 278 மணிநேரம் சிக்கியிருந்த 3 பேர் காப்பாற்றப்பட்டனர்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்தியா உட்பட பல நாடுகள் அங்குள்ள மக்களுக்கு உதவ மீட்புக் குழுக்களையும் அனுப்பியுள்ளனர்.. நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் 2 வாரங்கள் ஆன போதிலும், இப்போதும் உயிருடன் சிலரை மீட்பது மீட்புப் படையினருக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது.