சினிமா செய்திகள்

‘தும்பா’ பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா: மேடையில் கண்ணீர் விட்டு அழுதார் பிரபல நடிகர் அருண்பாண்டியன் மகள்!

சென்னை, ஜூன் 18

‘தும்பா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தின் கதாநாயகி கீர்த்தி பாண்டியன் விழா மேடையில் கண்ணீர் விட்டு அழுதார். பேசிக்கொண்டு இருக்கும்போதே உணர்ச்சிவசப்பட்டு அவர் தன் பேச்சை நிறுத்திக் கொண்டார்.

கண்ணீர் விட்டு அழுதார். கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் பேச வரும்போது முடியவில்லை. மவுனமாய் விசும்பிய அவரை மேடையில் இருந்தவர்கள் ஆசுவாசப்படுத்தினார்கள்.

பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியனின் (முன்னாள் எம்.எல்.ஏ.வும் கூட) மகள் கீர்த்தி. ‘தும்பா’ என்னும் தமிழ்ப் படத்தில நாயகியாக அறிமுகமாகிறார். இப்படம் 21ம் தேதி திரைக்குவருகிறது. இதை ஒட்டி தயாரிப்பாளர் சுரேகா நியபதி ஏற்பாட்டில் படத்தின் முன்னோட்ட விழா பிரசாத் ஸ்டூடியோ அரங்கில் நேற்று மாலை சிறப்பாக நடந்தது.

டைரக்டர் ஹரீஷ்ராம் மற்றும் நடிகர் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்ற விழாவில் கீர்த்தி பாண்டியன் பேசினார்.

‘‘எனக்கு ‘தும்பா’ தான் முதல் படம். முழுக்க முழுக்க காடுகளில் படமாக்கப்பட்டிருக்கும் படம்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்று வாய்ப்பு கேட்டு நான் பலரை சந்தித்தேன். அவர்களில் பலர் என்னுடைய தோற்றத்தைப் பார்த்து நீ எல்லாம் நடித்தால் எவன் பார்ப்பான் என்று கிண்டலடித்து மனசு வருத்தம்படும்படி செய்தார்கள். நேருக்கு நேராக இப்படி சொல்லி விட்டு போனார்கள்.

இந்த உருவத்தை யார் பார்ப்பார்கள்? தியேட்டருக்கு ரசிகர்கள் வரமாட்டார்கள் என்று பேசிவிட்டு போனதும், என்னை மிகவும் கவலைக்குள்ளாக்கியது. அதை நினைத்து நினைத்து பல சந்தர்ப்பங்களில் வருந்தியிருக்கிறேன். வாய்விட்டு அழுதிருக்கிறேன்.

இத்தகைய சூழ்நிலையில், முதல்முறையாக என்னுடைய தோற்றத்தை பார்த்து எதுவும் சொல்லாமல் படத்தில் கதாநாயகி இப்படித்தான் இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தேன். அதற்காகவே உங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறேன் என்று சொல்லி என்னை துணிச்சலாக நாயகியாக படத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறார் ஹரீஷ்ராம். அவருக்கு ஆயுள் முழுவதும் நான் நன்றி சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லி கண் கலங்கினார். கண்களில் இருந்து நீர் தாரை தாரையாக வழிந்தது. தொடர்ந்து பேசமுடியாமல் முகத்தை திருப்பிக் கொண்டு கண்ணீரை துடைத்துக் கொண்டார். அவரை மேடையில் இருந்தவர்கள் சமாதானப்படுத்தினார்கள். ஓரிரு நிமிடங்களுக்கு பிறகு அவர் தொடர்ந்து பேசி, படப்பிடிப்பு குழுவினர் அனைவருக்கும் தன்னுடைய நன்றியையும் குறிப்பாக பெண் தயாரிப்பாளர் சுரேகாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

நடிகை அழகாக இருக்க வேண்டும் என்பதில்லை அவர் நடிப்பது அழகாக இருந்தால் போதும்’’ என்பது எங்கள் இயக்குனர் ஹரீஷ்ராமின் வார்த்தைகள் என்று அறிமுக நகைச்சுவை நடிகர் தீனா பேசிய போது, கைதட்டி மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்.

வந்திருந்தவர்களை மக்கள் தொடர்பாளர் டி ஒன் சுரேஷ், ரேகா, நாசர் குழுவினர் வரவேற்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *