செய்திகள்

துப்புரவு பணியாளர்களின் நலத்திட்டம், மருத்துவம், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

Spread the love

திருவள்ளூர், பிப்.14–

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி பகுதி தனியார் திருமண மண்டபத்தில், துப்புரவு பணியாளர்களின் மறுவாழ்வு தேசிய ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹர்மேனி தலைமையில், கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் முன்னிலையில், துப்புரவு பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நலத்திட்டம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தேசிய ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹர்மேனி செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

திருவள்ளூர் மாவட்டத்தில் தூய்மை பணிகளில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக ஆய்வுக் கூட்டம் இன்று திருவேற்காடு நகராட்சி பகுதியில் நடைபெற்றது.

இத்துப்புரவு பணியாளர்களுக்கு போதுமான அளவு மருத்துவ வசதிகள், மருத்துவ காப்பீடுகள் மற்றும் மருத்துவ முகாம்களும் அவைகள் பணிகளில் ஈடுபடுவதற்கு தேவையான முகமூடிகள், கையுறைகள், கால் உறைகள், ரெயின் கோட் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா, அவர்களுக்கு முறையான ஊதியம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா என்பது தொடர்பாக கேட்டறியப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி, திருவள்ளுர், திருத்தணி, திருவேற்காடு மற்றும் பூவிருந்தவல்லி ஆகிய 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள் மற்றும் 526 ஊராட்சிகள் உள்ளது. இவற்றில் பணிபுரியும் அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாக தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்து வழங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தவறும் அலுவலர்கள் மீது அரசுக்கு நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரைக்கப்படும். மேலும், துப்புரவு தொழிலாளர்களை அரசின் உரிய அனுமதி இல்லாமல் பாதூகப்பு உபகரணங்கள் இல்லாமல் பணிகளில் ஈடுபடுத்தும் தனியார் மீதும் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் தனியார் துப்புரவு பணிகளில் ஈடுபடும் நபர்கள் தங்களை தாங்களே பதிவு செய்துக்கொண்டு பணிகளில் ஈடுபட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் வித்யா, காவல்துறை உதவி ஆணையர் (பூவிருந்தவல்லி) செம்பேடு பாபு, அனைத்து நகராட்சி ஆணையர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *