செய்திகள்

துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் வண்கொடுமை: காசிமேடு சப்- இன்ஸ்பெக்டர் கைது

சென்னை, ஜூன் 25–

துப்பாக்கி முனையில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காசிமேடு சப்- இன்ஸ்பெக்டர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்து சிறுமியின் தாய் மற்றும் பெரியம்மாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாதவரம் துணை ஆணையர் அலுவலக சப்–இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சதீஷ்குமார் (வயது 37). 2011-ம் ஆண்டு நேரடி சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்துள்ளார். தேர்தல் நேரத்தில் காசிமேடு போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்ட சதீஷ்குமார் பின்பு மாதவரம் துணை ஆணையர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர் இதற்கு முன்பு மாதவரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண்ணுடன் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு 15 வயதில் மகள் ஒருவர் உள்ளார். அவளுக்கும் சதீஷ்குமார் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றார். ஆனால் அவள் அதற்கு இணங்கவில்லை. அதனால் துப்பாக்கி முனையில் சிறுமியை மிரட்டி அவர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கு அவளது தாயும் உடந்தையாக இருந்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்று தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.

இது தொடர்பான தகவல் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியது. இந்த சம்பவம் பற்றி மாதவரம் துணை கமிஷனரான சுந்தரவதனத்துக்கும் தெரிய வந்தது. அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து புழல் அனைத்து மகளிர் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதிரடியாக அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பாலியல் அத்துமீறலுக்கு சிறுமியின் தாய் மற்றும் பெரியம்மா உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தாய் மற்றும் பெரியம்மா மீது வழக்குப்பதிவு செய்யத போலீசார் அவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர், சிறுமியின் தாய், பெரியம்மா ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாரின் நடவடிக்கைகள் பற்றி முழு அளவில் விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன்படி போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் பணியில் சேர்ந்த நாளில் இருந்து அவர் எங்கெல்லாம் பணியாற்றி உள்ளார். அவர் நடவடிக்கை எப்படி என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணலி இன்ஸ்பெக்டர் புகழேந்தி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மாதவரம் சப்-இன்ஸ்பெக்டரும் போக்சோ சட்டத்தில் கைதாகி இருப்பது காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *