ஸ்டான்லி மருத்துவமனை கைதிகள் வார்டில் சிகிச்சை
சென்னை, ஜன. 17–
துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி பாம் சரவணனுக்கு ஜனவரி 30 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து பொதுவார்டில் உள்ள பாம் சரவணன் இன்று கைதிகள் வார்டுக்கு மாற்றப்படுகிறார்.
சென்னை புளியந்தோப்பு வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் என்ற பாம் சரவணன் (41). கொலை முயற்சிகளின் போது நாட்டு வெடிகுண்டுகளை வீசி காரியத்தை கச்சிதமாக முடிப்பதில் இவர் கைதேர்ந்தவர் என்பதால் பாம் சரவணன் என ரவுடிகள் வட்டாரத்தில் அழைக்கப்படுகிறார். பாம் சரவணன் “ஏ ப்ளஸ்” ரவுடிகள் பட்டியலில் இருப்பவர். இவர் மீது 6 கொலை வழக்குகள், 2 வெடிகுண்டு வீசிய வழக்கு உட்பட 26 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பரும் பகுஜன் சமாஜ் கட்சியின் வட சென்னை மாவட்ட செயலாளராக இருந்தவருமான தென்னரசு கடந்த 2016 ஆம் ஆண்டு, ரௌடி ஆற்காடு சுரேஷ் கும்பலால் கொலை செய்யப்பட்டார். அந்த தென்னரசுவின் சகோதரர்தான் இந்த பாம் சரவணன்.
பாம் சரவணன் தலைமறைவான நிலையில் சென்னை போலீசார் பல்வேறு இடங்களில் தனிப்படை அமைத்து சரவணனை தேடி வந்தனர். தனது சகோதரர் தென்னரசு மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைகளுக்கு பழிவாங்க, பாம் சரவணன் தலைமறைவாக இருப்பதாகவும், அதற்காக ஸ்கெட்ச் போட்டுக் காத்திருப்பதாகவும் உளவுப்பிரிவு போலீசார், எச்சரிக்கை விடுத்ததையடுத்து போலீசார் கடந்த ஒரு மாதகாலமாக பாம் சரவணனை தீவிரமாக தேடி வந்தனர்.
சரவணன் ஆந்திராவில் இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு சித்தூர் மாவட்டம் வரதப்பாளையம் பகுதியில் ரவுடி பாம் சரவணனை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்னையின் புறநகர் பகுதியில் ரகசிய இடத்தில் அவரிடம் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை விசாரணைக்காக தனிப்படை போலீசார் அழைத்துச் சென்றபோது போலீசாரை தாக்கி விட்டு, நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பி ஓட பாம் சரவணன் முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர். பாம் சரவணனிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாம் சரவணன் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் காலில் குண்டு அகற்றப்பட்டு, அறுவை சிகிச்சை முடிந்து பொதுவார்டில் உள்ள பாம் சரவணன் இன்று கைதிகள் வார்டுக்கு மாற்றப்படுகிறார். இந்நிலையில், பாம் சரவணனுக்கு ஜனவரி 30 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், அண்ணனின் கொலைக்கு பழி தீர்க்க பன்னீர்செல்வத்தை கடத்தி, ஆந்திர எல்லையில் பாம் சரவணன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து எரித்துக் கொன்றது, பாம் சரவணன் அளித்த வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால், பன்னீர்செல்வம் காணாமல் போன வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.